கிராஃபீன் கொண்டு உருவாகும் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மாடல்கள்… அப்படி என்ன சிறப்பு தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போன்களை கடந்தாண்டு வெளியிட்டது. அப்போது 15 சீரிஸ் ப்ரோ மாடல் போன்கள் டைட்டானியம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பெரிது விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், அந்த மாடல் போன்கள் நல்ல விற்பனையையும் கண்டது.
இந்த சூழலில், ஐபோன் 15 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்கள் அதிகம் சூடாவதாக பயனர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். நிறுவனம் இதை கருத்திற்கொண்டு சரிசெய்ய முன்வந்தாலும், புதிய மாடல் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் Graphene-னை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டப் பிறகு, பல யூஸர்கள் தங்கள் ஐபோன்கள் ஹீட்டாவதாக புகார் செய்யத் தொடங்கினர். மிகவும் சூடாக இருக்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். மிங்-சி குவா போன்ற பல டெக் வல்லுநர்களும் இதை சுட்டிக்காட்டி பேசினர். இறுதியில் ஆப்பிள் தொழில்நுட்ப ஆய்வாளர்கள், பழைய உலோகத்தை மாற்றியதால் வந்த பிரச்னையை உணர்ந்தனர்.
காரணம் டைட்டானியம் உலோகத்தில் வெப்பக்கடத்தலை தாக்குப்பிடிக்கும் திறன் குறைவாக இருந்ததை உணர்ந்தனர். இதனால் பெரிய செயலிகளைப் பயன்படுத்தும் போதோ அல்லது கேமராவை அதிக நேரம் பயன்படுத்தும் போதோ ஐபோன் சூடாவதை யூஸர்கள் உணர முடியும். இதை சரிசெய்ய ஆப்பிள் புதிய ஐஓஎஸ் 17.0.2 பதிப்பை வெளியிட்டது. சிலருக்கு இது தற்காலிக தீர்வாக இருந்தாலும், மீண்டும் பிரச்னை எழத் தொடங்கியது.
தொடர்ந்து யூஸர்கள் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் சூடாவதாக வருத்தம் தெரிவித்தனர். நிறுவனத்திற்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பி வந்தனர். முக்கியமாக இன்ஸ்டாகிராம், உபர் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும்போது, ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அதிகம் சூடாவதாக உணர்ந்தனர். இது குறித்து பதிவிட்ட யூஸர்கள் ஒருவர், “நான் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலைப் பயன்படுத்துகிறேன். என்னால் இதன் சூட்டைத் தாங்க முடியவில்லை. ஏன்; போனைத் தொடக் கூட முடியவில்லை. இதனால் அவ்வப்போது மொபைலை ஒரு நிமிடம் கீழே வைத்துவிட்டு மீண்டும் பயன்படுத்த தொடங்குகிறேன்,” எனத் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாகவே, போனில் பயன்படுத்தப்படும் பயானிக் சிப்செட்டின் மேலே கிராஃபீன் பூச்சை கொண்டு வர ஆப்பிள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது இந்தாண்டில் வெளியாகும் ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலோகம் அல்லாத கிராஃபீன் வெப்பக் கடத்தலுக்கு சிறந்தாக உள்ளது. மேலும் வளையும் தன்மை, நீடித்து உழைக்கும் திறன் போன்றவை இதன் சிறப்புகளாகப் பார்க்கப்படுகிறது. எனவே, அதிக செயலிகளைப் பயன்படுத்தும் புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் திறனை கிராஃபீன் கொண்டிருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். அதையே தான் ஆப்பிள் நிறுவனமும் சோதனைக்குட்படுத்தி உள்ளது.