கரன்சியை குவிக்கும் மம்முட்டியின் கறுப்பு வெள்ளை படம்
மம்முட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கிய பிரமயுகம் திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
ராகுல் சதாசிவன் ஷேன் நிகாம், ரேவதி நடித்த பூதகாலத்தை இயக்கியவர். தாய் – மகனுக்குள் நிலவும் இறுக்கமான உறவுப்பின்னணியில் ஹாரர் அம்சங்களைச் சேர்த்து பூதகாலத்தை அவர் எடுத்திருந்தார். வழக்கமான ஹாரர் திரைப்படத்திலிருந்து மாறுபட்டு, முற்றிலும் புதிய வெளிச்சத்தில் பூதகாலம் அனைவரையும் கவர்ந்தது.
அவரது பிரமயுகம் படத்தின் டீசர் வெளியான போதே படத்தின் மேக்கிங், முதன்மை கதாபாத்திரத்தில் வரும் மம்முட்டியின் நடிப்பு என பல அம்சங்கள் பாராட்டுக்களை பெற்றன. இந்நிலையில், நேற்று வெளியான படத்தை ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக மம்முட்டியின் நடிப்பும், ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவும் சிலாகித்து பாராட்டப்பட்டுள்ளது.
17 ம் நூற்றாண்டில் தெற்கு மலபார் பகுதியைச் சேர்ந்த, பாணர் குலத்து தேவன் காட்டில் வழிதவறிவிடுகிறான். அடர்ந்த வனத்தினுள் ஒரு அரண்மனை தென்பட அதில் தஞ்சமடைகிறான். அது மணக்கால் கொடுமன் போற்றியின் அரண்மனை. அங்கு அவரும், அவரது சமையல்காரரும் வசித்து வருகின்றனர். பாணனின் பாடல் பிடித்துப் போய் அவனை அங்கு தங்கிக் கொள்ள கொடுமன் போற்றி அனுமதிக்கிறார். அந்த அரண்மனையில் மர்மமான பல விஷயங்களை தேவன் அனுபவப்படுகிறான். அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கிறான். தனது அரண்மனைக்குள் ஒருவன் வந்த பிறகு, அவன் தனது விருப்பத்துக்குட்பட்டே நடக்க வேண்டும் என்கிறார் கொடுமன் போற்றி. அந்த அரண்மனையில் உள்ள மர்மங்கள் என்ன, தேவன் அங்கிருந்து தப்பிச் சென்றானா என்பது கதை.
கொடுமன் போற்றியாக மம்முட்டி ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். தேவனாக வரும் அர்ஜுன் அசோகன் நடிப்பில் அவருக்கு ஈடுகொடுத்தள்ளார். சமையல்காரராக வரும் சித்தார்த் பரதன் உள்பட படத்தில் வரும் அனைவரும் கதைக்கேற்ற நடிப்பை வழங்கியுள்ளனர். மம்முட்டிக்கு இணையாக பாராட்டப்பட வேண்டிய மூவர், ஒளிப்பதிவாளர் ஷென்னத் ஜாலியா, எடிட்டர் ஷபீக் முகமது அலி மற்றும் இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர். ராகுல் சதாசிவனும், எழுத்தாளர் T.D.ராமகிருஷ்ணனும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வசனத்தை T.D.ராமகிருஷ்ணன் தனித்து எழுதியுள்ளார். பிரமயுகத்தின் அனைத்து அம்சங்களையும் கச்சிதமாக உருவாக்கியவிதத்தில் தானொரு சிறந்த இயக்குநர் என்பதை ராகுல் சதாசிவன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். முழுக்க கறுப்பு வெள்ளையில் படத்தை எடுத்திருப்பது இன்னொரு சிறப்பு.
நேற்று வெளியான பிரமயுகம் கேரளாவில் சுமார் மூன்று கோடிகள் வசூலித்துள்ளது. அரபு நாடுகளில் முதல் நாளில் 3.3 கோடிகளை தனதாக்கியுள்ளது. பிற இடங்களையும் சோர்த்து, முதல்நாளில் சுமார் 7.6 கோடிகளை பிரமயுகம் வசூலித்துள்ளது. ஒரு மலையாள பரீட்சார்த்த திரைப்படத்துக்கு இந்த வசூல் அமோகம். படத்துக்கு கிடைத்துவரும் நேர்மறை விமர்சனங்கள் காரணமாக இன்றும், நாளையும் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.