மகா சிவராத்திரி 2024 எப்போது? எப்படி விரதம் இருப்பது? என்ன பலன்கள் கிடைக்கும்?
சிவபெருமானுக்கு அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளை சிவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. அப்படி மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாளை தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். இந்துக்களின் மிகவும் முக்கியமான விரத நாட்களில் ஒன்றான சிவராத்திரியை நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். எனவே மகா சிவராத்திரி விரதம் எப்போது வருகிறது, அதன் முக்கியத்துவம் என்ன? எப்படி விரதம் இருப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
மகா சிவராத்திரி 2024 : எப்போது?
இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இரவு 8.20 மணி முதல் மார்ச் 9 மாலை 6 மணி வரை சதுர்த்தசி திதி உள்ளது. இதனால் மார்ச் 8-ம் தேதி இரவு 8.30 மணிக்கு பிறகே சிவராத்திரி பூஜையை தொடங்க வேண்டும். சூரிய பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் முதல் நாள் மாலை தொடங்கி அடுத்த நாள் காலை வரை சிவனுக்கு நான்கு கால பூஜை செய்யப்படும்.
மகா சிவராத்திரி சிறப்புகள் :
உலக நன்மைக்காக பார்வதி தேதி சிவபெருமானை பூஜை செய்து வழிபட்ட நாளையே மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். ராத்திரி என்றால் இரவு பொழுதை குறிக்கும். ஆனால் ராத்ரம் என்ற சொல்லுக்கு அறிவு என்று பெயர். உலகின் தலைவனான சிவ பெருமானை உணர்ந்து அனுபவிக்க கூடிய அறிவை தரும் ராத்திரி என்பதாலேயே சிவ ராத்திரி மிகவும் சிறப்புடையாக கருதப்படுகிறது.
சிவ பெருமானை நம்முள் உணர்ந்து, நமக்குள் இருக்கும் சிவ தன்மை வெளிப்படும் நாள் என்பதால் சிவ ராத்திரியில் விரதம் இருந்து சிவ பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலன்களை தரக்கூடியது. சிவராத்திர் இரவு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதில் முதல் காலத்தில் பிரம்மாவும், இரண்டாம் காலத்தில் பார்வதி தேவியும் மூன்றாம் காலத்தில் தேவர்களும் நான்காம் காலத்தில் மனிதர்கள் உள்ளிட்ட மற்ற உயிரினங்களும் சிவனை வழிபட்டு பயனடையும் காலம் என்று சொல்லப்படுகிறது.
மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை :
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருக்க வேண்டும். சிவனுக்கு அபிஷேகம், ருத்ராபிஷேகம் செய்து, சிவ மந்திரங்களை உச்சரித்து சிவனின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்யலாம். துன்பங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவதற்கு இந்த நாள் ஏற்றதாகும். மகா சிவராத்திரி அன்று அதிகாலை எழுந்து புனித நீராடி, வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர் மாலையில் சிவாலயங்களுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேகம் பூஜைகளில் பங்கேற்கலாம்.
மகா சிவராத்திரி நாளி முடிந்தவரை ‘ஓம் நம சிவாய’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மேலும் சிவ புராணம் பாராயணம் செய்வது சிறப்பானதாகும். மற்ற மாதங்களி சிவ ராத்திரி விரதத்தை கடைபிடிக்க முடியாதவர்கள், மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி விரதம் இருந்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரி விரதங்களை மேற்கொண்ட பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே மகா சிவராத்திரி விரதம் இருந்தால் முந்தைய பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்குவதுடன் மனக்கவலை, நோய், துன்பங்கள் நீங்கும். மேலும் வாழ்வில் அனைத்து விதமான இன்பங்களும், வளமும் கிடைக்கும்.