வெளியேறிய அஸ்வின்.. ஐசிசி விதியால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. 10 வீரர்கள் தான்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாதியில் விலகினார் ரவிச்சந்திரன் அஸ்வின். அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அஸ்வின் இரண்டாம் நாள் ஆட்டத்துடன் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.
அஸ்வின் இல்லாத நிலையில் இந்திய அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறது. ஃபீல்டிங்கில் மட்டுமே மாற்று வீரரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றபடி பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ மாற்று வீரர்களை இந்திய அணி பயன்படுத்த முடியாது.
தற்போது உள்ள டெஸ்ட் கிரிக்கெட் விதிப்படி ஒரு வீரருக்கு தலையில் பந்து அடித்தோ அல்லது வேறு வகையில் காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம். பாதி போட்டியில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஒரு வீரர் விலகினாலும் மாற்று வீரரை சேர்க்க விதிகள் உள்ளன.
அப்படி சேர்க்கப்படும் வீரர் பேட்டிங் மற்றும் பந்து வீசலாம். ஆனால், அதிலும் கூட காயம் ஏற்படும் வீரரின் திறனுக்கு இணையான வீரரைத் தான் அணியில் சேர்க்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் காயத்தில் சிக்கும் போது, ஒரு ஆல் – ரவுண்டரையோ அல்லது பந்துவீச்சாளரையோ அணியில் சேர்க்க முடியாது.
தலையில் ஏற்படும் காயத்தை தவிர ஒரு வீரர் வேறு காரணத்துக்காக டெஸ்ட் போட்டியில் பாதியில் விலகினால் அவருக்கு மாற்று வீரரை அணியில் சேர்க்க அனுமதி இல்லை. அதே சமயம், ஃபீல்டிங் செய்ய மட்டுமே மாற்று வீரரை சேர்க்கலாம். அவர் அதிகபட்சம் விக்கெட் கீப்பிங் செய்ய அனுமதி உள்ளது. அதைத் தாண்டி அவரால் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ முடியாது.
எனவே, அஸ்வின் பாதி போட்டியில் விலகியதால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. அஸ்வின் இந்தப் போட்டியில் இதுவரை 1 விக்கெட் மற்றும் 37 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கை கொடுத்த நிலையில், அவர் இல்லாமல் இந்திய அணி பேட்டிங்கிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது அஸ்வினுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் ஃபீல்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.