அஸ்வினுக்கு பதிலாக 5வது பவுலர்.. இந்திய அணியில் குழப்பம்.. தூக்கத்தை தொலைத்த ரோஹித் சர்மா

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாதியில் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஃபீல்டிங் செய்ய மட்டுமே இந்திய அணி மாற்று வீரரை பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால், இந்திய அணியின் பந்துவீச்சில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவங்கதேசம் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும், பும்ரா, முகமது சிராஜ் என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களும் அணியில் இடம் பெற்று இருந்த நிலையில், அஸ்வின் பாதி போட்டியுடன் விலகி இருக்கிறார்.

அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அஸ்வின் மீண்டும் சென்னை வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் நான்கு பந்துவீச்சாளர்களுடன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் மீதம் உள்ள இங்கிலாந்து அணியை 4 பந்துவீச்சாளர்களுடன் சமாளிப்பது இந்திய அணிக்கு கடினமாக இருக்கும்.

பொதுவாக குறைவாக ரன் எடுக்கப்படும் போட்டிகளில் நான்கு பந்துவீச்சாளர்களே போதுமான ஓவர்களை வீசி விக்கெட்களை வீழ்த்தி விடுவார்கள். உதாரணத்துக்கு கடந்த மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா என இரண்டு அணிகளும் நான்கு பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தின. சில இன்னிங்ஸ்களில் நான்காவது பந்துவீச்சாளருக்கு மிகக் குறைந்த ஓவர்களே அளிக்கப்பட்டன. அதற்கு காரணம், குறைவான ஸ்கோர் எடுக்கப்பட்டது தான்.

தற்போதைய இங்கிலாந்து அணி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு எதிரணி பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைப்பதை அடிப்படை திட்டமாகவே வைத்து ஆடுகிறார்கள். விக்கெட்டும் கிடைக்காமல், ரன்களை கொடுத்துக் கொண்டே இருந்தால் பந்துவீச்சாளர்கள் சோர்வடைவார்கள். எனவே, இந்திய அணி ஐந்தாவதாக பகுதி நேர பந்துவீச்சாளரை பயன்படுத்தி முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் ஓய்வு தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நேற்று நள்ளிரவு நேரத்தில் தான் அஸ்வின் சென்னை திரும்பப் போவது குறித்து கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தெரிய வந்திருந்த நிலையில், இரவில் ஐந்தாவது பந்துவீச்சாளராக யாரை பயன்படுத்தலாம் என்ற விவாதம் எழுந்திருக்கும். மூன்று வீரர்களை மட்டுமே இந்திய அணி ஐந்தாவது பந்துவீச்சாளராக பயன்படுத்த முடியும். அது சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் சர்பராஸ் கான். ரோஹித் சர்மா பந்து வீச வாய்ப்பு குறைவு தான். சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *