அஜித் படம்.. 12 நாள் ஒரே பேண்ட்-சட்டை.. எஸ்.ஜே.சூர்யா இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரா?

அஜித் நடித்த ஆசை படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா 12 நாட்களாக ஒரே சட்டை மற்றும் பேன்ட்டில் இருந்துள்ளார். இதுபற்றிய சுவாரசிய தகவல்களை பிரபல இயக்குனர் வசந்த்திடம் உதவி இயக்குனராக இருந்த இயக்குனர் மணிபாரதி விவரித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஆசை படத்திற்காக டெல்லி, குளுமனாலிக்கு 12 நாட்கள் நாங்கள் ஷூட்டிங் சென்றோம். அப்போது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் ஒரே ஒரு உதவி இயக்குனர் தான் போக முடியும். படத்தின் இயக்குனர் வசந்த்துடன் நான் செல்கிறேன். ஆனால் உதவி இயக்குனராக இருந்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு எப்படியாவது டெல்லி ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆசை படத்தில் ஒரு குட்டி நாய் இடம்பெற்றிருக்கும். அதை ஏற்பாடு செய்தது எஸ்.ஜே. சூர்யா தான்.
ஒரு கால்நடை மருத்துவரை நேரில் பார்த்து அவரிடம் இருந்து நாய்க்குட்டியை அவர் வாங்கி வந்தார். அதே நாயை நாங்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனென்றால் அதற்கும் டெல்லியில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் நாய்க்குட்டியை பராமரிக்க வேண்டும் அல்லவா. அதற்கு ஏதாவது ஒன்றாகிவிட்டால் நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். அப்போது நான் இயக்குனர் வசந்த்திடம் சென்று, ‘இதனை சூர்யா தான் கொண்டு வந்தார். அவரும் டெல்லிக்கு வரட்டும். அவர் நாய்க்குட்டியை பார்த்துக் கொள்வார். என்று கூறினேன்.
கடைசி நேரத்தில் சூர்யாவிற்கும் ரயிலில் டிக்கெட் போட்டு அவரையும் வண்டியில் ஏற்றி விட்டோம். பிரச்சனை என்னவென்றால் எஸ்.ஜே. சூர்யா எந்தவொரு லக்கேஜும் கொண்டு வரவில்லை. அணிந்திருந்த பேண்ட் சட்டை மற்றும் நாய் குட்டியுடன் அப்படியே கிளம்பி டெல்லிக்கு வந்து விட்டார். அங்கு 12 நாட்களும் ஒரே பேண்ட் சட்டைதான் போட்டிருந்தார்.
இரவு ரூமுக்கு வந்ததும் அதை துவைத்து காய போட்டு விடுவார். காலையில் ஷூட்டிங் தளத்திற்கு அந்த சட்டை பேண்ட்டை போட்டு வந்து விடுவார். அப்படி ஒரு ஈடுபாடு, வெறி எஸ்.ஜே.சூர்யாவுக்கு உண்டு. அதுதான் இன்று அவரை உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இன்னொரு முறை சூட்டிங் ஸ்பாட்டில் ரிசப்ஷனிஸ்ட் கேரக்டருக்கு ஒருவரை ஏற்பாடு செய்திருந்தோம். அவரைப் பார்த்த இயக்குனர் வசந்துக்கு திருப்தி ஏற்படவில்லை. அவர் ஆளை மாற்ற சொன்னார். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் எங்கே போய் புதிய ஆளை தேடுவது? என்ற நெருக்கடியில் இருந்தோம். இது பற்றி சூர்யாவிடம் நான் சொன்னேன். சூர்யா என்ன பண்ணலாம் என்று அவரிடம் கேட்டேன். அவர் அதற்கு சார் ஒரு 10 நிமிஷம் இருங்க. இப்ப வந்துடறேன். என்று சொல்லிவிட்டு ஒரு டிப்டாப்பான ஆளை பிடித்துக் கொண்டு வந்தார்.
அவரை வைத்து காட்சிகளையும் நாங்கள் படமாக்கி விட்டோம். இயக்குனருக்கு அந்த ஆள் மீது நல்ல திருப்தி ஏற்பட்டது. ஷூட்டிங் முடிந்ததும் நான் அவரிடம் ரிசப்ஷனிஸ்ட் கேரக்டருக்கு ஆளை எங்கே பிடித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் பக்கத்தில் உள்ள ஓட்டலில் சென்று அவரிடம் பேசி அழைத்து வந்தேன் என்று கூறினார். அந்த ஆளை சூர்யா இதற்கு முன்பு பார்த்ததும் கிடையாது. பேசியதும் கிடையாது, ஆனால் எப்படியோ அவரை கன்வின்ஸ் பண்ணி ஷூட்டிங்கிற்கு கொண்டு வந்து விட்டார். அதுவும் 10 நிமிஷத்தில். அப்படி ஒரு மகா திறமைசாலி எஸ்.ஜே. சூர்யா இவ்வாறு அவர் தெரிவித்தார்.