“எங்க மேல நம்பிக்கை இல்லையா” ரோஹித் முடிவால் கடுப்பான சீனியர் வீரர்கள்.. ஆப்பு வைத்த இங்கிலாந்து

இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த தவறான முடிவால் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் இந்திய அணி தடுமாறியது. இதை அடுத்து மூத்த பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா, ரோஹித் சர்மா முடிவால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் குவித்தனர். அடுத்து பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி. அந்த அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் தனது அதிரடி ஆட்டத்தால் போட்டியை இங்கிலாந்துக்கு சாதகமாக மாற்றினார்.

இந்திய அணியில் பும்ரா, சிராஜ் முதல் ஆறு ஓவர்களை வீசினர். அதில் பென் டக்கெட், ஜாக் கிரவுளி ஜோடி 31 ரன்கள் குவித்தது. இதை அடுத்து ஸ்பின்னர்களை பயன்படுத்த நினைத்த கேப்டன் ரோஹித் சர்மா அஸ்வின் மற்றும் ஜடேஜாவை அழைக்காமல், குல்தீப் யாதவை அழைத்தார். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.

பின்னர் 12வது ஓவரின் போது தான் அஸ்வினுக்கு பந்து வீச வாய்ப்பு கிடைத்தது, அதற்குள் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் குவித்து விட்டது. பின்னர் அஸ்வின் கிரவுளி விக்கெட்டை சாய்த்தார். ஆனால், பென் டக்கெட் விக்கெட்டை அவர் ரன் குவிக்கும் முன்பே வீழ்த்தாததால் அவருக்கு அழுத்தம் கொடுத்து விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அவர் 80 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணியை திணற வைத்தார்.

பென் டக்கெட் இடது கை பேட்ஸ்மேன் என்ற நிலையில், வலது கை ஆஃப் ஸ்பின்னரான அஸ்வினை முதல் 5 ஓவர்களுக்குள் அவருக்கு பந்து வீச அழைத்து இருக்க வேண்டும். அதே போல, துவக்கத்திலேயே ஜடேஜா – அஸ்வின் ஜோடியாக பந்து வீசி இருந்தால் நிச்சயம் பென் டக்கெட் அழுத்தத்தை உணர்ந்து இருப்பார். இதில் முக்கியமான விஷயம், இதுவரை பென் டக்கெட், அஸ்வின் பந்துவீச்சை ஐந்து முறை எதிர்கொண்டு, ஐந்து முறையும் அவரிடமே விக்கெட்டை இழந்துள்ளார்.

இப்படி ஒரு புள்ளி விவரம் கையில் இருந்தும் அதை வைத்தே அஸ்வினை முதலில் பந்து வீச அழைக்காமல் சொதப்பி இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. தங்களை நம்பாமல் போனதை அடுத்து ஜடேஜா, அஸ்வின் இருவரும் ரோஹித் சர்மாவின் இந்த முடிவின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அஸ்வின் செய்தியாளர் சந்திப்பின் போது வெளிப்படையாக இந்த முடிவை விமர்சித்தார். தான் பென் டக்கெட்டுக்கு அவர் 0 ரன்னில் இருக்கும் போது தான் பந்து வீச விரும்புவேன். அவர் 60 – 70 ரன்கள் குவித்த பின் பந்து வீச விரும்ப மாட்டேன் என கூறி இருந்தார். முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஃபின்-னும் இந்த முடிவை சுட்டிக் காட்டி ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *