பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்: கட்சியின் தலைவராகத் தொடர்வாரா ஜே.பி.நட்டா?
பாஜக தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா? என்பது இன்றும் நாளையும் நடக்கும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
விரைவில் நடைபெற இருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வலுவான அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, பாரதிய ஜனதா கட்சி தேசிய கவுன்சில் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இரண்டு நாள் நடக்கும் இந்த நிகழ்வு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இன்று தொடங்குகிறது.
இரண்டு நாள் நடக்கும் இந்தக் கூட்டம் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 11,500 பாஜக பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
தேசிய கவுன்சிலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இன்று கட்சியின் தலைவர் நட்டா பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். முன்னதாக, பிரதமர் மோடி பாரத் மண்டபத்தில் உள்ள கண்காட்சியைப் பார்வையிட்டார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பிரச்சார வியூகம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. பொதுத்தேர்தலில் 400 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள பாஜக பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.
இரண்டு நாள் நிகழ்வில் பாஜகவின் தேசியத் தலைவர் பதவியில் ஜே.பி. நட்டா தொடர்வாரா என்றும் முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
2020 ஜனவரி முதல் 2023 ஜனவரி வரை மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்துடன் பாஜக தேசியத் தலைவர் பதவி ஜே. பி. நட்டாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அது நீட்டிக்கபட்டு ஜூன் 2024 வரை அவரே தலைவராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று பாஜக அறிவித்தது.
அதன்படி, மக்களவைத் தேர்தல் முடியும் வரை பாஜக தேசியத் தலைவர் பதவியில் மாற்றம் ஏதும் இருக்காது என்றபோது, தேர்தலுக்குப் பின் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து டெல்லியில் நடக்கும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கக்கூடும் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.