புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு Debit Card: ஜேர்மன் நகரமொன்றில் சோதனை முயற்சி துவக்கம்…
ஜேர்மனியில், விரைவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் பணமாக கொடுக்கப்படாமல், டெபிட் கார்டாக கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு Debit Card
ஜேர்மனியில் வசிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள், தங்களுக்கு அரசு வழங்கும் நிதியுதவியை, தங்கள் நாட்டிலுள்ள குடும்பத்தினருக்கு அனுப்புவதைத் தடுக்கும் வகையில், அவர்களுக்கு அரசு வழங்கும் உதவி, பணமாக கொடுக்கப்படாமல், அதற்கு பதிலாக டெபிட் கார்டாக வழங்கப்பட உள்ளது.
சோதனை முயற்சி துவக்கம்
இந்நிலையில், சோதனை முயற்சியாக ஜேர்மனியின் துரிஞ்சியா மாகாணத்திலுள்ள Greiz என்னும் நகரத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு என்பதைக் கேட்பதற்கு ஏதோ நல்ல செய்தி போலத் தெரிந்தாலும், உண்மையில் அதன் நோக்கம் மோசமானதாக உள்ளது. Greiz நகரின் மாவட்ட நிர்வாகியான Martina Schweinsburg என்பவர், இந்த திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.
இந்த டெபிட் கார்டு முறை, நகரில் பதற்றங்களை குறைத்துள்ளதாகக் கூறும் அவர், இந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் பல்பொருள் அங்காடிகளுக்குச் செல்கிறார்கள். 20 யூரோவுக்கு ஒரு பொருளை வாங்குகிறார்கள். அதற்கு பணம் கொடுப்பதற்காக ஒரு பெரிய பணக்கட்டிலிருந்து ஒரு 100 யூரோ நோட்டை உருவிக் கொடுக்கிறார்கள். அது பார்ப்பதற்கு நன்றாகவா இருக்கிறது? ஆகவே, எனது நகரில் நான் அமைதியைக் கொண்டு வர விரும்பினேன். அதனால் இந்த டெபிட் கார்டு முறையை அமுல்படுத்தினேன். அது உண்மையாகவே அமைதியைக் கொண்டு வந்துள்ளது என்கிறார்.
ஜேர்மானியர்கள் பொதுவாக எவ்வளவு விலையுயர்ந்த பொருளை வாங்கினாலும், அதற்கு ரொக்கமாகத்தான் பணம் கொடுப்பார்கள். அதற்காக எப்போதும் கட்டுக்கட்டாக பணத்தை சுமக்கும் ஜேர்மானியர்கள் பலர் உண்டு.
அப்படியிருக்கும் நிலையில், தங்களைப் போலவே புகலிடக்கோரிக்கையாளர்கள் கையில் பணம் கையிலிருப்பது ஜேர்மானியர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.