தமிழகத்தில் நோட்டாவுக்கு விழும் ஓட்டு கூட பாஜகவுக்கு கிடைக்காது.. போற போக்கில் திமுகவை விளாசிய விந்தியா..!
திமுக ஆட்சியில் அமைச்சர்களால் தூக்கமின்றி தவிப்பதாக முதல்வர் ஸ்டாலினே புலம்புகிறார் என விந்தியா கூறியுள்ளார்.
பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் திருவள்ளுவர் திடல் கோட்டூர் ரோடு மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகை விந்தியா பேசுகையில்: அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் மக்கள் சேவை செய்வதால் துாங்க முடியாமல் இருந்தனர். ஆனால் இன்று திமுக ஆட்சியில் அமைச்சர்களால் தூக்கமின்றி தவிப்பதாக முதல்வர் ஸ்டாலினே புலம்புகிறார்.
மக்களை டிசைன் டிசைனாக திமுகக்காரர்கள் ஏமாற்றுவார்கள். கேமரா முன் நின்று பேசுவார்கள். ஆனால், தேர்தல் என்றவுடன் தனித்து நிற்க பயப்படுவார்கள். திமுகவிற்க்கு ஓட்டு போடுவதும் குரங்குக்கு கோட்டு போடுவதும் ஒன்று என்றும் விந்தியா கடுமையாக விமர்சித்தார். எங்கள் தலைவர்களையும், தமிழக மக்களை மதிக்கவில்லை என்பதால் பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை கூறி வருகிறார். இப்போது எழுதி வைத்துக் கொள்ளுங்கள், தமிழகத்தில் நோட்டாவுக்கு விழும் ஓட்டு கூட பாஜவுக்கு கிடைக்காது. நோட்டாவுக்கு சமமாக இருக்கும் பாஜக, சமீபத்தில் ஒரு விளம்பரம் செய்தது. 17 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்தார்கள் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. தம்பி அண்ணாமலை, அந்த 17 பேரையும் பாஜகவில் சேர்த்தற்குப் பதில், முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தால் புண்ணியம் கிடைத்திருக்கும். இதனால் பாஜகவிற்கு பயந்து பென்சில் வாங்கக்கூட பெரியவர்களை வெளியே அனுப்ப பொதுமக்கள் பயப்படுகிறார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்ல, தென் மாநிலங்களில் பாஜ பருப்பு வேகாது. தமிழகத்தில் பாஜக ஆட்சி மலராது. அண்ணாமலை எண்ணமும் பலிக்காது. மதவாத அரசியலை பாஜக கைவிட வேண்டும் என விந்தியா ஆவேசமாக கூறினார்.