பாதியில் விலகிய ஜெய்ஸ்வால்.. பதறிய ரோஹித்.. 3வது டெஸ்ட்டில் எதிர்பாராத திருப்பம்.. என்ன நடந்தது?
ராஜ்கோட் : இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி சதம் அடித்தார்.
எனினும், சதம் அடித்த சில நிமிடங்களில் வலியில் துடித்த அவர், மைதானத்தை விட்டு தாமாகவே வெளியேறினார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ரன்களும், இங்கிலாந்து அணி 319 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இது அவரது மூன்றாவது டெஸ்ட் சதம் ஆகும். 13 இன்னிங்ஸ்களில் அவர் மூன்றாவது சதம் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சதம் அடித்து இரண்டு ஓவர்கள் பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் பின்னர் முதுகு வலியால் துடித்தார். பின்னர் இந்திய அணியின் மருத்துவ உதவியாளர் விரைந்து அவருக்கு வலி நிவாரணி மாத்திரை அளித்தார். சில உடற்பயிற்சிகளை செய்ய வைத்தார். ஆனாலும், அவரது வலி குறையவில்லை. அதைக் கண்ட கேப்டன் ரோஹித் சர்மா பதற்றத்தில் இருந்தார்.
மூன்றாவது நாள் ஆட்டம் முடிய சில ஓவர்களே இருந்த நிலையில் 104 ரன்கள் சேர்த்த ஜெய்ஸ்வால் ரிட்டையர்ட் முறையில் வெளியேற முடிவு செய்தார். பொதுவாக கடைசி ஓவர்களில் விக்கெட் வீழ்ச்சி ஏற்படும். அப்போது கவனமாக பேட்டிங் செய்ய வேண்டும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஜெய்ஸ்வால் வலியின் காரணமாக வெளியேறியதால் இந்தியா புதிய பேட்ஸ்மேனாக ரஜத் படிதாரை அனுப்பியது. அவர் 10 பந்துகளில் டக் அவுட் ஆனார். இப்படி நடக்கும் என்று தெரிந்து ரோஹித் சர்மா பதற்றம் அடைந்து இருக்கக் கூடும்.