7 டெஸ்ட்டில் “2 சதம், ஒரு இரட்டை சதம், 3 அரைசதம்”! சேவாக்கின் சாதனையை சமன்செய்த ஜெய்ஸ்வால்!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து முதல் போட்டியிலும், இந்தியா இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியானது ராஜ்கோட்டில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா இருவரின் அசத்தலான சதத்தால் 445 ரன்களை எட்டியது.
319 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து!
பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் பென் டக்கெட் “பாஸ்பால் அட்டாக்” என்றால் என்ன என்பதை வெளிப்படுத்தினார். எதிர்கொண்ட அனைத்து பவுலர்களுக்கு எதிராகவும் காட்டடி அடித்த பென் டக்கெட், 88 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
ஒரு கட்டத்தில் 224 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இருந்த இங்கிலாந்து அணி, எப்படியும் 400 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 153 ரன்களில் பென் டக்கெட் அவுட்டாகி வெளியேற, அதற்கு பிறகு களமிறங்கிய ஒரு இங்கிலாந்து பேட்டர் கூட ஒழுங்காக விளையாடவில்லை. 319 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.