அளவிற்கு அதிகமானால் தண்ணீரும் விஷம்… எச்சரிக்கும் நிபுணர்கள்!
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருந்தால் தான் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மறக்கக்கூடாது. அளவிற்கு அதிகமான தண்ணீர் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதற்கு பதிலாக, பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீரை சரியான நேரத்தில் சரியான அளவில், குடித்தால் தான் அதன் முழு பலனை பெற முடியும்.
வாட்டர் டாக்ஸிட்டி (Water Toxity) எனப்படும் உடல்நல பிரச்சனை
அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்பை, வாட்டர் பாய்ஸனிங் என கூறுவார்கள். அதாவது தண்ணீரே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷம் ஆகிவிடும். அதனால் வாட்டர் டாக்ஸிட்டி எனப்படும் உடல்நல பிரச்சனை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அளவிற்கு அதிகமான தண்ணீர், சிறுநீரகங்களில் கூட பாதிப்பை ஏற்படுத்தும்.
சிறுநீரகத்துக்கு, வேலைப்பளு அதிகமாகி பலவீனமடையும் வாய்ப்பு உள்ளது. அதோடு, அளவிற்கு அதிகமான தண்ணீரால் உடலில் உள்ள சோடியம் அளவு, மற்றும் எலக்ட்ரோலைட் அளவு பாதிக்கப்பட்டு, சம நிலையில் இல்லாமல் இருந்தால், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம் உண்டு.
தண்ணீரைக் குடிக்கும் சரியான முறை
தண்ணீரை, சரியான இடைவெளியில் குடிக்க வேண்டும். சிலர் நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்துவிட்டு, திடீரென்று ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் குடிப்பார்கள். இது சிறுநீரகத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் மற்றும் இதய செயல்பாடிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.