IND vs ENG : அஸ்வின் இல்லை.. பொறுப்பும் அதிகம்.. எங்கள் திட்டமே அதுமட்டும் தான்.. சிராஜ் ஓபன் டாக்!
இந்திய அணியில் அஸ்வின் இல்லாததால், 4 பவுலர்களின் பொறுப்பும் அதிகரித்துள்ளதாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த சூழலில் தாயார் உடல்நிலை காரணமாக நட்சத்திர வீரர் அஸ்வின் 3வது டெஸ்டில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் 3வது டெஸ்டின் 3வது நாள் ஆட்டத்தை இந்திய அணி 4 பவுலர்களுடன் தொடங்கியது. இந்திய அணியின் மிரட்டலான பவுலிங்கால் கடைசி 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி வெறும் 95 ரன்களுக்கு இழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 319 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானதால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைல் 126 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இதனை தொடர்ந்து 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் 322 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி உள்ளது. 4வது நாளில் 2 செஷன்கள் விளையாடினாலே எளிதாக 500 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்க முடியும். இதனால் இந்திய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய வீரர் முகமது சிராஜ் அளித்த பேட்டியில், நாங்கள் 4 பவுலர்கள் தான் இருந்தோம். அதனால் எங்களின் பொறுப்பு அதிகரித்தது என்று சொல்லலாம்.
இங்கிலாந்து அணி வீரர்கள் அட்டாக் செய்வார்கள் என்பதை எதிர்பார்த்திருந்தோம். அதனால் பெரிய திட்டம் எதுவும் நாங்கள் வைத்து கொள்ளவில்லை. அவர்கள் நிச்சயம் தவறு செய்வதற்காக காத்திருந்தோம். எப்போதுமே விக்கெட்டுகள் எடுப்பதற்கு யார்க்கர் பந்துகள் சிறந்த வழி. அதனை சிறப்பாக செயல்படுத்தினேன். என்னை பொறுத்தவரை ஒரு பவுலராக 6 டாட் பால்களை வீச வேண்டும். ஏனென்றால் தொடர்ச்சியாக 6 டாட் பால்களை அவர்கள் விளையாடி பழகவில்லை.
அதற்கேற்றபடி செயல்பட்டோம். 2வது டெஸ்டில் ஓய்வு கிடைத்த போது குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிந்தது. அதன்பின் பயிற்சியில் ஈடுபட்டேன். அதேபோல் பும்ராவின் சாகசங்களை தொலைக்காட்சியில் கண்டு ரசித்தேன் என்று கூறியதோடு, ஆர்சிபி அணி முகாமில் சந்திக்கலாம் என்று தினேஷ் கார்த்திக்கிடம் கூறினார்.