கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ் அல்ல.. அந்த வீரரை கண்டு அச்சமடைந்தேன்.. கவுதம் கம்பீர் ஓபன் டாக்!
கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட போது மும்பை அணியின் ரோகித் சர்மாவால் தூக்கத்தை இழந்து கஷ்டப்பட்டதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இங்கிலாந்து அணி பவுலர்கள் எவ்வளவு முயன்றும் ரோகித் சர்மாவின் விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடியவில்லை.
சிறப்பாக ஆடிய அவர் 131 ரன்களை விளாசினார். நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பான இன்னிங்ஸை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த முறை டி20 போட்டியில் இந்திய அணி திணறிய போதும், இதேபோல் சதம் விளாசி ரோகித் சர்மா அசத்தினார். இதனால் பிரச்சனையை உணர்ந்து பேட்டிங் செய்யும் கேப்டனாக ரோகித் சர்மா வளர்ச்சியடைந்துள்ளார்.
அதேபோல் 3ஆம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 4 பவுலர்களை வைத்து செய்த மாற்றங்கள் மற்றும் ஃபீல்ட் மாற்றங்கள் இங்கிலாந்து அணியை விரைவாக வீழ்த்த காரணமாக அமைந்தது. இதனால் பலரும் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் நாட்களில் ரோகித் சர்மா எப்படி இருந்தார் என்பது குறித்து கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
அதில், ஐபிஎல் நாட்களில் எனக்கு தூக்கமில்லா இரவுகளை அளித்தது கெய்ல், டி வில்லியர்ஸ் கிடையாது. அது ரோகித் சர்மா மட்டும் தான். ஏனென்றால் அவருக்கு தான் பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என்று ஏராளமான திட்டங்களுடன் வர வேண்டி இருக்கும். ரோகித் களத்தில் இருந்தால் அவரின் விக்கெட்டை வீழ்த்துவதே முதன்மை நோக்கமாக இருக்கும். அவர் வீழ்த்துவதற்கு பல்வேறு திட்டங்களுடன் கூடிய உழைப்பு தேவையாக இருக்கும்.
எப்போதும் சுனில் நரைனை வைத்து ரோகித் சர்மாவை கட்டுப்படுத்தலாம் என்று திட்டமிடுவேன். அவர் தொடக்க வீரராக வரும் போது சுனில் நரைனை சமாளித்துவிட்டால், அடுத்த 16 ஓவரில் என்ன நடக்கும் என்பது தெரியும். அவரால் ஒரே ஓவரில் 30 ரன்களை கூட விளாச முடியும். ரோகித் சர்மா மட்டும் தான் என் மனதில் அச்சத்தை விதைத்த ஒரே பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.