Vadacurry: கறி சுவையை மிஞ்சும் சைதாப்பேட்டை வடகறி: ரெசிபி இதோ
என்னதான் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் செய்து சாப்பிட்டாலும் வடகறி என்றால் அதன் சுவை சாப்பிடவே அப்படி இருக்கும்.
இந்த வடகறி பெரிய பெரிய ஹொட்டல்களை விட தெருவோர தள்ளுவண்டி கடையில் பிரபலமாக ஒரு உணவாக இருந்து வருகின்றன.
அந்தவகையில், கறி சுவையை மிஞ்சும் வகையில் சுவையான சைதாப்பேட்டை வடகறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க
கிராம்பு- 6
பட்டை- 5 துண்டு
ஏலக்காய்- 5
பச்சைமிளகாய்- 4
பூண்டு- 5 பல்
இஞ்சி- 1 துண்டு
சோம்பு- 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை- 1 கைப்பிடி
கசகசா- 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 8
கொத்தமல்லி- சிறிதளவு
புதினா- சிறிதளவு
தேங்காய்- ½ மூடி
வடை செய்வதற்கு
கடலை பருப்பு- 300g
காய்ந்த மிளகாய்- 6
சோம்பு- 1 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- 1 சிட்டிகை
வடகறி செய்வதற்கு
எண்ணெய்- 5 ஸ்பூன்
பட்டை- 2 துண்டு
கிராம்பு- 2
ஏலக்காய்- 4
சோம்பு- 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 4
கறிவேப்பிலை- 1 கொத்து
வெங்காயம்- 2
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய் தூள்- 1½ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், பச்சைமிளகாய், நறுக்கிய பூண்டு, நறுக்கிய இஞ்சி, சோம்பு, பொட்டுகடலை, கசகசா, புதினா, கொத்தமல்லி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பொன்னிறமாக வறுத்து வந்ததும் அடுப்பை அனைத்து அதில் தேங்காய் துருவலை சேர்த்து வாணல் சூட்டில் நன்கு வறுத்து ஆறவைத்து பின் மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பவுலில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து பின் கொரகொரப்பாக மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அரைத்த கலவையை ஒரு பவுலில் மாற்றி அதில் உப்பு மற்றும் பெருங்காயதூள் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கலந்து வைத்த பருப்பு கலவையை உதிர்த்துவிட்டு எண்ணெயில் பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து பொரிந்ததும் காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
பின் இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் அதில் அரைத்த மசாலா கலவை சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் அதில் உப்பு, மஞ்சள் தூள், காஸ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கொதித்ததும் அதில் பொரித்த வடையை சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதித்து வந்ததும் இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வடகறி தயார்.