ரூ.436 செலுத்தினால் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் கவரேஜ்… மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காப்பீடு எடுக்காமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக சொல்லப்படுகிறது. ஒன்று, காப்பீடு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது. இரண்டாவது, காப்பீடிற்கான ப்ரீமியம் தொகை அதிகமாக இருப்பது. இதனால்தான் மக்களின் நலனிற்காக விலை குறைவான காப்பீடு திட்டங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படியொரு அருமையான திட்டமே பிரதம மந்திரி ஜோதி பீமா யோஜனா (PMJJBY). இந்த காப்பீடு திட்டத்தில் ஆண்டு ப்ரீமியமாக ஒருவர் வெறும் ரூ.436 கட்டினால், ரூ. 2 லட்சம் மதிப்பிற்கான இன்சூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும். மேலும், இன்சூரன்ஸ் எடுத்த நபர் எதிர்பாராமல் இறந்து போகும் பட்சத்தில் அவரது குடும்பத்திற்கு இந்த தொகை வழங்கப்படும்.
வருடம்தோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை செயல்பாட்டில் இருக்கும் இந்த காப்பீடு திட்டத்தில், 18 வயது முதல் 55 வயதிற்குட்பட்ட நபர்கள் இணையலாம். இந்த திட்டத்தில் சேர வேண்டுமென்றால் உங்களிடம் கட்டாயம் வங்கி கணக்கு இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கு மூடப்பட்டாலோ அல்லது ப்ரீமியம் வசூலிக்கும் சமயத்தில் போதுமான பணம் வங்கி கணக்கில் இல்லாமல் இருந்தாலோ, இந்தக் காப்பீடு காலாவதியாகிவிடும்.
பிரதம மந்திரி ஜோதி பீமா யோஜனா (PMJJBY) காப்பீடு திட்டமானது ஒரு வருடத்திற்கு மட்டுமே இன்சூரன்ஸ் கவரேஜ் தரும். ஆகையால் இதை வருடத்திற்கொருமுறை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். இந்தக் காப்பீடு பெறுவதற்கு எந்தவித மருத்துவ பரிசோதனையும் தேவையில்லை. எனினும் குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை உத்தரவாத கடிதத்தில் நீங்கள் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.
பிரதம மந்திரி ஜோதி பீமா யோஜனா (PMJJBY) காப்பீடு திட்டத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை ப்ரீமியம் செலுத்தினால் போதும். இதற்கான வருடாந்திர ப்ரீமியம் ரூ.436 மட்டுமே. வருடத்தின் தொடக்கத்தில் நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தால், அந்த நாளிலிருந்துதான் ப்ரீமியம் கணக்கிடப்படும். வங்கியிலிருந்து ப்ரிமியத்திற்காக பணம் எடுக்கும் நாளுக்கும் இதற்கும் எந்த சம்மந்தம் கிடையாது.
உங்களிடம் பல வங்கி கணக்குகள் இருந்தாலும், ஒரு கணக்கிலிருந்து மட்டுமே இந்த காப்பீடு திட்டத்தில் சேர முடியும். மேலும் PMJJBY திட்டத்தில் சேர வேண்டுமென்றால் உங்கள் வங்கி கணக்கோடு ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும். காப்பீடிற்கான ஒரு வருட காலம் முடிவடையும் தருவாயில், அடுத்த வருடத்திற்கான ப்ரீமியம் தொகையை உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே செலுத்தும் வசதியும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்தால் மே 25 முதல் மே 31-ம் தேதிக்குள் உங்கள் வங்கி கணக்கிலிலிருந்து ரூ.436 கழிக்கப்படும். திட்டத்தில் சேர்ந்து 45 நாட்கள் கழித்து உங்களுக்கான இன்சூரன்ஸ் கவரேஜ் தொடங்கும்.