விஜய் நடிப்பில் லியோ 2 படம் உருவாகுமா..? லோகேஷ் கனகராஜ் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் நடிப்பில் லியோ 2 திரைப்படம் உருவாகுமா என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பதில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறி இருப்பவர் லோகேஷ் கனராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மிகப் பெரும் வெற்றியை பெற்றன. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், சஞ்சய்தத் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். லியோ படத்தின் முதல் பாதி மிக நன்றாக இருந்ததாகவும், இரண்டாவது பாதியில் திரைக்கதை மிகவும் சுமாராக இருந்ததாகவும் கலவை விமர்சனங்கள் வந்தன. இருப்பினும் ஒட்டுமொத்த அளவில் படம் வசூலை அள்ளிக் குவித்தது. அத்துடன் லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமா டிக்கெட் யூனிவர்சுக்குள் (எல்.சி.யு) வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தவாறு இந்த படம் அவரது முந்தைய படங்களான கைதி மற்றும் விக்ரம் படத்தின் காட்சிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதனால் லியோ 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. இந்த சூழலில் அரசியல் கட்சியை அறிவித்த விஜய், தான் ஒப்புக்கொண்ட இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார்.
அது எந்த படம் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விஜய்யின் கடைசி படம் தெலுங்கு இயக்குனர் இயக்கக்கூடிய படமாக இருக்கும் என்று தற்போது சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் லியோ 2 பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய்யின் எதிர்கால திட்டங்கள் வெகு உயரமாக இருக்கின்றன. லியோ 2 படம் உருவாகுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது. என்று கூறியுள்ளார். இதனால் விஜயின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.