நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவர் 171 பட அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்… எகிறும் எதிர்பார்ப்பு!

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ரஜினி லால் சலாம் என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியில் எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் பெறவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினி வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லைகா ப்ரொடக்‌ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் இவர்களுடன் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் உள்ளிட்டோரும் வேட்டையன் படத்தில் இடம்பெற்று இருப்பதால் அந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதை தொடர்ந்து ரஜினி தனது 171 வது படத்தை கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜின் திரைக்கதை மற்றும் மேக்கிங் தனித்துவம் மிக்கதாக இருக்கும் என்பதால் அவரும் ரஜினியும் சேரும் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. லியோ படத்தை முடித்துக் கொண்ட பின்னர், ரஜினி நடிக்கும் அவரது 171 வது படத்திற்கான கதையை உருவாக்குவதில் லோகேஷ் கனகராஜ் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஓன்றில் பங்கேற்ற அவரிடம், தலைவர் 171 பட அப்டேட் கேட்கப்பட்டது. அதற்காக கூறியதாவது-

தலைவர் 171 படத்தின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டியுள்ளது. அதில் முழு கவனம் செலுத்தி வருவதால் ஒன்றரை மாதமாக நான் செல்போனை பயன்படுத்தவில்லை. என்னை தொடர்பு கொள்ள பலரும் முயற்சித்தார்கள். ஆனால் நான் கதை உருவாக்கத்தில் கவனமாக இருப்பதால் அதில் மட்டுமே முழு கவனத்தை செலுத்துகிறேன். கதை குறித்து ரஜினி சாருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். படம் தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதால் கதையை தொடர்ந்து எழுதி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

லியோ படத்தில் முதல் பாதி மிக நன்றாகவும், இரண்டாவது பாதியில் திரைக்கதை சுமாராக இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு கதையை உருவாக்குவதில் லோகேஷிற்கு போதிய நாட்கள் கொடுக்கப்படவில்லை என்பது காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் தலைவர் 171 படத்திற்கு நீண்ட நாட்களை லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்டுள்ளதால் இந்த படம் வெகு சிறப்பாக வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *