மறைந்த எஸ்பிபி-யின் குரலை AI மூலம் மீண்டும் உருவாக்கம் : எஸ்பிபி சரண் எதிர்ப்பு..!
‘கீடா கோலா’ எனும் தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர் விவேக் சாகர் ஆகியோர் மீது எஸ்பிபி சரண் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாடகர் எஸ்பிபி, 2020ஆம் ஆண்டு கொவிட்-19 தொடர்பான சிக்கல்களால் இயற்கை எய்தினார்.“அப்பாவின் மறைவுக்குப் பிறகும் அவரது குரலுக்கு உயிர்கொடுக்கும் தொழில்நுட்பத்தை மதித்தாலும், வர்த்தக லாபத்திற்காக, எங்களுக்குத் தெரிவிக்காமலும் முறையான சம்மதம், அனுமதி பெறாமலும் இவ்வாறு செய்திருப்பது குடும்பத்தினருக்கு வருத்தமளிக்கிறது,” என்று சரண் கூறியுள்ளார்.
இத்தகைய ஏமாற்றுவேலை தொடர்ந்தால், இசையையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தற்போதைய பாடகர்களும் இசைக்கலைஞர்களும் அபாயத்தை எதிர்நோக்குவர் என்று அவர் எச்சரித்தார்.
‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரு எஸ்பிபியின் குரலை மறுஉருவாக்கம் செய்ததை யூடியூப் சேனலில் அளித்த நேர்காணலில் இசையமைப்பாளர் விவேக் சாகர் ஒப்புக்கொண்டதை அவர் குறிப்பிட்டார். அந்த நேர்காணல் 2023 நவம்பர் 28ஆம் தேதி வெளியானது.
எனவே, அனுமதியின்றித் தம் தந்தையின் குரலைப் பயன்படுத்தியதற்கு மன்னிப்புக் கோரவும், இழப்பீடு வழங்கவும், உரிமைத்தொகையில் பங்கு தரவும் கோரி அறிக்கை விடுத்திருப்பதாக சரண் கூறினார்.