மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்..!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில முதல்வரால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஏற்கனவே தனியாக ஒரு திட்ட மண்டலம் மற்றும் இரண்டு துணை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், அணை கட்டப்படும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பினை அடையாளப்படுத்தும் பணி, வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை ஆகியவை ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதாகவும், தேவையான அனுமதி பெற்ற பின்பு இந்தப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் துவங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை அவமதிப்பதோடு, தமிழகத்தின் உரிமையினை பறிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் வந்ததிலிருந்தே, மேகதாது அணை கட்டப்படும் என்று தொடர்ந்து அம்மாநில முதல்வரும், துணை முதல்வரும் பேசி வந்த நிலையில், தற்போது இதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது தமிழக மக்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே, தமிழக முதல்வர், கர்நாடக முதல்வரிடம் மேகதாது அணை கட்டும் திட்டத்தினை கைவிட வலியுறுத்தவும், தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், இது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மத்திய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *