தமிழகத்தை உலுக்கிய கொலை…12-ம் வகுப்பு பள்ளி மாணவன் வெட்டிப் படுகொலை..
கோவை நஞ்சப்ப செட்டி வீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பிரணவ் (17). இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக பிரணவ் நேற்று காலை மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள ஒண்டிபுதூர் பேருந்து நிறுத்தம் முன்பாக தனது தோழி ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென பிரணவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் படுகாயமடைந்த பிரணவ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
இதையடுத்து இளைஞர் அங்கிருந்து தப்பித்தார். இதனை கண்டதும் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக உடனே சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரணவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதனிடையே பிரணவை வெட்டி விட்டு தப்பி ஓடிய அந்த இளைஞர், சூலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதையடுத்து அவரை சூலூர் போலீசார் சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்துனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிங்காநல்லூர் டெக்ஸ்டைல் லே அவுட் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் என்பதும், காதல் விவகாரத்தில் பிரணவை வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து பேரரசுவிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரணவ் உடன் நின்றிருந்த பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.