உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு: தமிழக வெற்றிக் கழகம் நாளை ஆலோசனை!
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் விஜய், தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது எனவும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை அக்கட்சி நிர்வாகிகள் இப்போதே தொடங்கி விட்டனர்.
#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay pic.twitter.com/uLGLvsbVV4
— TVK Vijay (@tvkvijayhq) February 18, 2024
இந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு குறித்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நாளை நடைபெறவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நாளை (பிப்ரவரி 19ஆம் தேதி) காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது. நமது கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என கூறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதற்கு பின்னர் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது என்பதால் இக்கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.