ஹீரோ, ஹோண்டா இடையே போட்டி அதிகமாகுது!! ஜப்பானில் இருந்து களமிறங்கும் இரு புது பைக்குகள்
2023 EICMA கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம் அதன் புதிய என்.எக்ஸ்500 மற்றும் சிபிஆர்500ஆர் மோட்டார்சைக்கிள்களை காட்சிப்படுத்தி இருந்தது. அத்துடன், புதிய என்.எக்ஸ்500 மற்றும் சிபிஆர்500ஆர் பைக்குகளின் 400சிசி வெர்சன்கள் பற்றிய விபரங்களையும் ஹோண்டா வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், 2024 ஹோண்டா என்.எக்ஸ்400 மற்றும் 2024 ஹோண்டா சிபிஆர்400ஆர் பைக்குகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த 400சிசி ஹோண்டா பைக்குகளை பற்றிய விரிவான விபரங்களை இனி பார்க்கலாம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற 2023 EICMA கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம் அதன் புதிய என்.எக்ஸ்500 மற்றும் சிபிஆர்500ஆர் மோட்டார்சைக்கிள்களை காட்சிக்கு நிறுத்தி இருந்தது.
அத்துடன், அந்த நிகழ்ச்சியில், புதிய என்.எக்ஸ்500 மற்றும் சிபிஆர்500ஆர் பைக்குகளின் 400சிசி வெர்சன்கள் குறித்த விபரங்களையும் ஹோண்டா வெளியிட்டு இருந்தது. என்.எக்ஸ்500 பைக்கின் 400சிசி வெர்சனாக கொண்டுவரப்படும் என்.எக்ஸ்400 பைக் ஏற்கனவே ஜப்பான் நாட்டில் விற்பனையில் உள்ளது. அதேபோல், சிபிஆர்400ஆர் பைக்கும் ஜப்பானில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த இரு ஹோண்டா பைக்குகளும் தற்போது 2024ஆம் ஆண்டிற்கான அப்டேட்களை பெற்றுள்ளன. 2024 ஹோண்டா என்.எக்ஸ்400 பைக்கை பொறுத்தவரையில், இது ஒரு மாடர்ன் ஸ்ட்ரீட் அட்வென்ச்சர் பைக் ஆகும். ஜப்பானில் மற்றொரு அட்வென்ச்சர் பைக்கையும் ‘400எக்ஸ்’ என்ற பெயரில் ஹோண்டா 2013ஆம் ஆண்டில் இருந்து விற்பனை செய்து வருகிறது. அந்த 400எக்ஸ் பைக்கின் சில ஹைலைட்கள் 2024 என்.எக்ஸ்400 பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளன.
2024 என்.எக்ஸ்400 மற்றும் 2024 சிபிஆர்400ஆர் பைக்குகள் இரண்டும் புதிய அப்டேட்களாக, ஹோண்டாவின் செலக்டபிள் டார்க் கண்ட்ரோலையும், 5-இன்ச் ஃபுல்-கலர் டிஎஃப்டி டிஸ்பிளேவையும் பெற்றுள்ளன. ஹோண்டா ரோடுசிங்க் செயலி மூலமாக, பயனர்கள் ப்ளூடூத் வாயிலாக தனது மொபைல் போனை பைக் உடன் இணைத்துக் கொள்ள முடியும்.
இதன் மூலமாக, மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளை ஆக்ஸஸ் செய்ய முடியும் என்பது மட்டுமின்றி, பயணத்திற்கு தேவையான டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனையும் பெறலாம். 2024 சிபிஆர்400ஆர் பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரையில், ஹெட்லைட் உடன் சேர்த்து ஹெட்லேம்ப் கௌல் மற்றும் டெயில்லைட்டின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த 400சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கில் சில துளைகள் புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளன. கிராண்ட் பிரிக்ஸ் ரெட் மற்றும் மேட் பாலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் என இரு விதமான பெயிண்ட் ஆப்ஷன்கள் 2024 சிபிஆர்400ஆர் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன. 2024 என்.எக்ஸ்400 பைக்கிற்கும் கிராண்ட் பிரிக்ஸ் ரெட் பெயிண்ட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலிஸ்டிக் கருப்பிற்கு பதிலாக பளபளக்கும் பேர்ல் வெள்ளை நிற ஆப்ஷனை ஹோண்டா வழங்கியுள்ளது.
2024 ஹோண்டா என்.எக்ஸ்400 மற்றும் சிபிஆர்400ஆர் பைக்குகள் இரண்டிலும் 399சிசி, வாட்டர் கூல்டு, DOHC, 4-வால்வு பேரலல், 2-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சப்-மிடில்வெயிட் மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் 2024 என்.எக்ஸ்400 மற்றும் 2024 சிபிஆர்400ஆர் பைக்குகள் இரண்டையும் இந்திய மார்க்கெட்டில் ஹோண்டா அறிமுகம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.