முதல்முறையாக ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்தியா.. பிவி சிந்து தலைமையில் வெற்றி
ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி 3-2 என்ற அளவில் தாய்லாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இளம் வீராங்கனை அன்மோல் கர்ப் மீண்டும் ஒருமுறை இந்திய அணியை மீட்டு இந்த இறுதிச் சுற்றில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்ற தாய்லாந்திற்கு எதிராக பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணியின் இளம் குழு, அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி வெற்றி பெற்றது.
இந்த தொடரில் பெரும்பாலான அணிகள் தங்களின் முன்னணி வீராங்கனைகள் இல்லாமல் ஆடின. அதே போலவே, தாய்லாந்தும் முழு பலத்துடன் இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். அவர்கள் தங்களின் முதல் இரண்டு ஒற்றையர் ஆட்டக்காரர்களான உலகின் நம்பர் 13இல் இருக்கும் ரட்சனோக் இன்டனான் மற்றும் உலகின் நம்பர் 16இல் இருக்கும் போர்ன்பாவீ சோச்சுவாங் ஆகியோர் இல்லாமல் இந்த தொடரை சந்தித்து இருந்தனர்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, நான்கு மாத காயத்தால் ஓய்வில் இருந்த பிறகு மீண்டும் ஆக்ரோஷமாக களத்துக்கு திரும்பினார். அவர் தனது அனுபவத்தால் உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள சுபனிடா கேத்தோங்கை 21-12 21-12 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதன் மூலம் இறுதிச் சுற்றில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
தரவரிசையில் 23வது இடத்தில் இருக்கும் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் தங்கள் அற்புதமான ஆட்டத்தால் தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஜோங்கோல்பன் கிடிதரகுல் மற்றும் ரவிந்தா பிர ஜோங்ஜாய் ஜோடியை 21-16 18-21 21-16 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் ஜப்பானின் முன்னாள் உலக சாம்பியனான நோஜோமி ஒகுஹாராவுக்கு எதிராக அஷ்மிதா சாலிஹா அசத்தலான வெற்றி பெற்று இருந்ததால் தாய்லாந்தின் அனுபவ வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பானை வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அஷ்மிதா 11-21 14-21 என்ற கணக்கில் அனுபவம் வாய்ந்த தாய்லாந்து வீராங்கனையிடம் வீழ்ந்தார்.
மூத்த தேசிய சாம்பியனான இளம் ஸ்ருதி மிஸ்ரா மற்றும் பிரியா கொன்ஜெங்பாம் ஜோடி, உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பென்யாபா ஐம்சார்ட் மற்றும் நுண்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியிடம் 11-21 9-21 என்ற கணக்கில் 29 நிமிடங்களில் தோல்வி அடைந்தனர். இதை அடுத்து இந்தியா, தாய்லாந்து அணிகள் 2 – 2 என்ற சமநிலையில் இருந்தன.
வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டியில் இந்தியாவின் அன்மோல் கர்ப், 21-14 21-9 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி தரவரிசையில் 45வது இடத்தில் இருக்கும் போர்ன்பிச்சா சோய்கிவோங்கை வீழ்த்தினார்.
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டு முறையே ஆண்கள் அணி வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றிருந்தது. அதன் பின் இப்போது மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று இருக்கிறது. இதுவே இந்தியாவின் முதல் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தங்கம் ஆகும்.