மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தை!
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைகளில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் சுமார் ஓராண்டுக்கு நீடித்த நிலையில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து, விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்து.
இந்த நிலையில், அதேபோன்றதொரு போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் தங்களது ஊர்களில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டனர். தலைநகர் டெல்லியை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், டெல்லியில் எல்லைகளில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், பஞ்சாப், ஹரியாணா மாநில எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசுடன் தங்களது கோரிக்கைகள் குறித்து விவசாய சங்கங்கள் இன்று 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. ஏற்கனவே, கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 3 கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படாததால், விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
சண்டிகரில் மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோருடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். முன்னதாக, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதற்காக அவசரச் சட்டம் கொண்டு வருமாறு விவசாயிகள் நேற்று வலியுறுத்தினர். இன்றைய பேச்சுவார்த்தைக்கு கூட்டத்திற்குப் பிறகு தங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், அதனை முறியடிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.