Rashmika Mandanna: ‘இப்படித்தான் மரணத்திலிருந்து தப்பினோம்’-தொழில்நுட்ப கோளாறில் சிக்கிய விமானம்-ராஷ்மிகா மந்தனா பதிவு
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது விமானம் அவசரமாக தரையிறங்கியதாகக் கூறி ஒரு போட்டோவைப் பகிர்ந்துள்ளார்.
டெக்கான் க்ரோனிக்கலின் அறிக்கையின்படி, நடிகை பயணித்த விமானம் ‘தொழில்நுட்ப கோளாறு’ காரணமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ராஷ்மிகாவின் விமானப் பயணம் பற்றிய கூடுதல் விவரங்கள்
சனிக்கிழமை ராஷ்மிகா நடிகை ஷ்ரத்தா தாஸுடன் தான் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பதிவு செய்திருந்தார். அதில் “இன்று நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்” என்று எழுதினார். டெக்கான் க்ரோனிக்கல் அறிக்கையின்படி, ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா மற்றும் பிற பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் விஸ்தாரா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, பயணிகள் கடுமையான அச்சத்தில் உட்கார வேண்டியிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம், எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் மும்பைக்குத் திரும்பியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
ராஷ்மிகாவின் சமீபத்திய மும்பை பயணம்
நடிகை நேஹா தூபியாவின் சாட் நிகழ்ச்சியான நோ ஃபில்டர் நேஹாவின் ஆறாவது சீசனில் ராஷ்மிகா மந்தனா தோன்ற உள்ளார். நேஹாவுடன் நிகழ்ச்சியின் பதிவுக்காக அவர் சமீபத்தில் மும்பையில் காணப்பட்டார். இந்த எபிசோடுக்கு ராஷ்மிகா கருப்பு நிற டாப் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார். நடிகர்கள் ஷாஹித் கபூர், கார்த்திக் ஆர்யன், டைகர் ஷிராஃப் மற்றும் நடிகை கீர்த்தி சனோன் ஆகியோரும் நோ ஃபில்டர் நேஹா சீசன் 6 க்கான விருந்தினர் பட்டியலில் ஒரு பகுதியாக உள்ளனர்.
ராஷ்மிகா விரைவில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15 வெளியிடப்பட உள்ளது.
ராஷ்மிகா சமீபத்தில் வெளியான அனிமல் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இப்படத்தில் ரன்பீர் கபூர், பாபி தியோல் மற்றும் அனில் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிமல் 2023 ஆம் ஆண்டின் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக மாறியது, ஆனால், இந்தப் படம் பற்றி பல நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது நினைவிருக்கலாம்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியிலும் ராஷ்மிகா மந்தனா விமான விபத்தில் தப்பிப்பது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.