`ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் காப்புக்கட்டு!’ பிப்ரவரி 25-ல் பிரசித்திபெற்ற பொங்காலை விழா!
வரும் 25-ம் தேதி பிரசித்திபெற்ற பொங்காலை வழிபாடு நடைபெற இருக்கிறது. இதுகுறித்து ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல்விழா பப்ளிசிட்டி கமிட்டியைச் சேர்ந்த சித்ரலேகா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“மதுரையை எரித்துவிட்டுக் கோபத்துடன் வந்த கண்ணகி தேவியின் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பொங்கலிட்டு ஆற்றுகாலில் வழிபடுவதாக ஐதிகம் உண்டு. அதுபோன்று மகிஷாசுரனை வதம் செய்தபின்பு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும் தேவிக்குப் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவதாக மற்றொரு புராணத்தில் கூறப்படுகிறது. பொங்கலிடும் பெண்களுக்கு ஆற்றுகால் தேவி அஷ்ட ஸித்திகளையும், சகல ஐஸ்வர்யங்களையும் அருளுவார். ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் இல்லாமல் திறந்தவெளியில் லட்சகணக்கான பெண்கள் பொங்காலை வழிபாடு நடத்துகின்றனர்.
பொங்காலை வழிபாட்டுக்குப் புதிய மண் பானை, பச்சரிசி, வெல்லம், நெய், தேங்காய் ஆகியவை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆற்றுகால் பொங்காலை
பிப்ரவரி 17-ம் தேதி சனிக்கிழமை அம்மனுக்குக் காப்புக்கட்டிக் குடியிருத்துதலுடன் விழா தொடங்கியது. பிப்ரவரி 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பண்டார அடுப்பில் தீ மூட்டுதலுடன் பொங்காலை வழிபாடு நடைபெறும். மதியம் 2.30 மணிக்கு உச்ச பூஜையும், பொங்காலை நிவேத்யம் மற்றும் தீபாராதனையும் நடைபெறும். பொங்காலை நிகழ்ச்சியில் 26 லட்சம் பெண்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இரவு 7.30 மணிக்கு குத்தியோட்டம், சூரன்குத்து, இரவு 11 மணிக்கு அம்மன் எழுந்தருளல் ஆகியவை நடைபெறும்.
10-ம் நாள் விழாவான பிப்ரவரி 26-ம் தேதி இரவு 9.45 மணிக்கு காப்பு அவிழ்த்துக் குடி இறக்குதல் நிகழும். அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு குருதி தர்ப்பணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெற இருக்கிறது” என்றார்.