சுப்மன் கில் கதையை முடித்த குல்தீப் யாதவ்.. களத்திலேயே கொந்தளித்த பிரின்ஸ்.. இங்கிலாந்துக்கு போனஸ்!
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் 91 ரன்களில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை சேர்த்திருந்தது. சுப்மன் கில் 65 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இவர்கள் இருவருமே 4வது நாளை தொடங்கினர்.
இன்றைய ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே குல்தீப் யாதவ் சிக்சர் அடிக்க, இங்கிலாந்து பவுலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் மூலம் தொடக்கத்திலேயே அட்டாக் செய்ய இந்திய அணி முடிவெடுத்து களமிறங்கியதாக பார்க்கப்பட்டது. கில் – குல்தீப் யாதவ் இருவருமே பவுண்டரிகளில் ரன்களை சேர்க்க, இவர்களின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.
சுப்மன் கில் 90 ரன்களை கடந்த நிலையில், கடந்த போட்டியை போல் மீண்டும் 2வது இன்னிங்ஸில் சதமடிப்பார் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டாம் ஹார்ட்லி வீசிய பந்தில் குல்தீப் யாதவ் இறங்கி வந்து மிட் ஆன் திசையில் பந்தை அடித்தார். அது வேகமாக பென் ஸ்டோக்ஸ் கைகளில் சிக்க, சுப்மன் கில் அதனை பார்க்காமல் எதிர்முனையில் இருந்து விரைவாக வெளியேறினார். ஆனால் குல்தீப் யாதவ் மீண்டும் க்ரீஸிற்கு திரும்ப, சுப்மன் கில் அவரின் க்ரீஸிற்கு திரும்ப முயன்றார்.
அதற்குள் பென் ஸ்டோக்ஸ் ரன் அவுட் செய்ய, பரிதாபமாக சுப்மன் கில் 91 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் சதமடிக்கும் வாய்ப்பும் மிஸ்ஸானது. நைட் வாட்ச் மேனாக களமிறங்கிய குல்தீப் யாதவ் சுப்மன் கில்லின் விக்கெட்டை காப்பதற்காக ஓடி வந்திருக்க வேண்டும். அதற்காக தான் அவர் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்டார்.