இந்திய சரித்திரத்திலேயே மாபெரும் டெஸ்ட் வெற்றி.. சாதித்த ரோஹித் படை.. பம்மிப் பதுங்கிய இங்கிலாந்து
ராஜ்கோட் : இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.
577 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணியின் வரலாற்றிலேயே ரன்கள் வித்தியாசத்தில் இதுதான் பெரிய வெற்றி ஆகும். இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது பெரிய தோல்வி ஆகும்.
இளம் வீரர்களை கொண்ட அணியை வைத்து இங்கிலாந்து அணியின் கதையை முடித்துள்ளது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் Bazball எனும் அதிரடி ஆட்டம் ஆடும் பாணி இந்தியாவிடம் எடுபடாமல் போனது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் குவித்து இருந்தனர்.
அடுத்து இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின் இரண்டாம் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 214*, சுப்மன் கில் 91, சர்ஃபராஸ் கான் 68* ரன்கள் குவித்தனர். இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 557 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்து இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்தது இந்திய அணி.
அந்த இலக்கை எட்ட வாய்ப்பே இல்லை என்பது தெரிந்த நிலையில் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. ஜடேஜா 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் இதுவே பெரிய வெற்றி ஆகும்.