சொந்த மண்ணில் கெத்து.. இங்கிலாந்து மிடில் ஆர்டரை கலங்கடித்த ஆல்ரவுண்டர்.. வெற்றிக்கு காரணமே அவர்தான்
ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 430 ரன்கள் சேர்த்த நிலையில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து கிராலி – டக்கெட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.
அதில் சிராஜ் மற்றும் ஜுரெல் இருவரும் அட்டகாசமான ஃபீல்டிங் காரணமாக டக்கெட் 4 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து கிராலி 11 ரன்களில் பும்ரா வேகத்தில் வீழ்ந்தார். இதன்பின் ரவீந்திர ஜடேஜா அட்டாக்கில் வந்தார். தேநீர் இடைவேளைக்கு பின் அட்டாக்கை தொடங்கிய ஜடேஜா, இங்கிலாந்து அணியின் போப் 7, பேர்ஸ்டோவ் 4 ரன்கள் எடுத்திருந்த போது வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து ஜோ ரூட்டை 7 ரன்களில் வீழ்த்த இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை ஒற்றை ஆளாக தகர்த்தார். தொடர்ந்து பென் ஃபோக்ஸ் மற்றும் அதிரடியாக ஆடிய மார்க் வுட் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 12.4 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ஜடேஜா, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் சொந்த மண்ணில் ஜடேஜாவின் ஆட்டம் இப்படி தான் இருக்கும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றிக்கு ஜடேஜா தனி வீரராக மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அதிலும் பேட்டிங்கில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்த போது, ரோகித் சர்மாவுடன் இணைந்து ஜடேஜா பதற்றம் இல்லாமல் ஆடி அசத்தினார்.
அதேபோல் நம்பர் 5 வரிசையில் களமிறங்கிய அனுபவமும் இல்லாமல், ஜடேஜா மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் சொந்த மண்ணில் எந்த லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்பதை கணித்து ஜடேஜா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.