டாடா குழுமம் அடம்பிடித்து வாங்கிய சாஸ் நிறுவனம்.. சும்மாயில்ல 5,500 கோடி ரூபாய்..!
பிரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற சைனீஸ் வகை உணவுப் பொருட்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையோர கடைகளில் தொடங்கி பெரிய உணவகங்கள் வரை சீன வகை உணவுகளின் விற்பனை களைகட்டியுள்ளது.
சிங்’ஸ் சீக்ரெட் : 1990களில் இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் சைனீஸ் எனப்படும் உணவு பொருட்கள் விற்பனைக்கு வர தொடங்கின. அப்போது உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த அஜய் குப்தா மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வந்தார்.
சீன வகை உணவுகளுக்கான சந்தை வருங்காலத்தில் பெரிய அளவில் இருக்கும் என்பதை உணர்ந்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனையாகும் சீன வகை உணவுகளை, ருசித்து மதிப்பிட ஃபுட் டேஸ்டர்களை அனுப்பி வைத்தார்.
அவர்கள் அளித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் சீன உணவுகளில் உள்ளூர் சுவை இல்லை மற்றும் அவற்றுக்கு என ஒரு பொதுவான பெயர் இல்லை என்பதை உணர்ந்தார். இந்த வெற்றிடத்தை நிரப்ப சிங்’ஸ் சீக்ரெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
சாஸ்களுக்கு கிடைத்த வரவேற்பு: பொதுவாக ஃபிரைடு ரஸ் , நூடுல்ஸ்களுக்கு ருசியை கூட்டுவது அதில் சேர்க்கப்படும் சாஸ்கள் தான். எனவே அஜய் குப்தா 1995ஆம் ஆண்டு சிங்’ஸ் சீக்ரெட் என்ற சாஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
சீனாவின் கடைசி அரசு வம்சமான கிங் வம்சத்தின் அடிப்படையில் இந்த பெயரை சூட்டினார். எளிமையாக சீன உணவுகளை தயாரிக்க ஏதுவாக சோய் சாஸ், கிரீன் சில்லி சாஸ் மற்றும் ரெட் சில்லி சாஸ்களை தயாரித்து விற்பனை செய்தார்.
முதலில் விநியோகஸ்தர்கள் இதனை வாங்க மறுத்தனர், இது சந்தையில் எடுபடாது என்றே பதில் அளித்தனர். ஒரு மார்க்கெட்டிங் நிபுணரான அஜய் குப்தா புதிய யுக்தியை கையாண்டார். அதாவது சாலையோர கடைகளுக்கு தன்னுடைய சாஸ்களை இலவசமாக கொடுத்தார். சில கடைகளை ஸ்பான்சர் செய்து சிங்’ஸ் ஃபுட் ஸ்டால் என விளம்பரம் செய்தார்.
சிறிது காலத்திலேயே சிங்’ஸ் சீக்ரெட் பெரியளவில் பிரபலம் அடைந்து, நாகாலாந்து முதல் கன்னியாகுமரி வரை இதற்கு டிமாண்ட் அதிகரித்தது.எனவே 1996ஆம் ஆண்டு 2.5 கோடி ரூபாய் மதிப்பில் நாசிக்கில் ஆலையை நிறுவினார். இந்தியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இந்தோ -சைனீஸ் உணவுபொருட்கள் ஆலை இது.
“சிங் சாப்பிடு மற்றதை மறந்திடு”: 2010ஆ ஆண்டு இந்த நிறுவனத்தின் வருவாய் 110 கோடி ரூபாய் என உயர்ந்தது. “சிங் சாப்பிடு மற்றதை மறந்திடு” என சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றது. 2014இல் முதன்முறையாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிராண்ட் தூதராக அறிவித்து, கேப்டன் ரன்வீர் சிங் என பிரபலப்படுத்தினர்.
இது இந்த பிராண்ட் மேலும் பிரபலமடைய உதவியது. எனவே நிறுவன வருவாய் 110 கோடியில் இருந்து 350 கோடியாக அதிகரித்தது. 11 மாநிலங்களில் 1,50,000 கடைகளில் இது விற்பனைக்கு வந்தது.
1000 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்வு: 2023இல் அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் என்ற நிறுவனம் இதில் 27% பங்குகளை வாங்கியது. இதன்மூலம் நிறுவனத்தின் மதிப்பு 1500 கோடியாக அதிகரித்தது. இதனை அடுத்து சிங்’ஸ் சீக்ரெட் நிறுவனத்தை வாங்க டாடா, ஐடிசி, நெஸ்ட்லே ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டி போட்டன.
இறுதியாக டாடா நிறுவனம் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. சுமார் 5,500 கோடி ரூபாய்க்கு இந்த நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதன் மூலம் FMCG துறையிலும் டாடா நிறுவனம் கால்பதித்துள்ளது.