நிறுவனம் துவங்கி 5 மாதத்தில் விற்பனை.. 255 கோடி லாபம்..! யார் இந்த ராகுல் ராய்..?!
அண்மை காலமாக டிஜிட்டல் நாணயமான கிரிப்டோ கரன்சிகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அந்த துறையில் கால்பதித்த சிறிது காலத்திலேயே கோடீஸ்வரராக உயர்ந்திருக்கிறார் ஒரு இளைஞர்.
கிரிப்டோ கரன்சி என்பது ஒரு டிஜிட்டல் சொத்து. குறிப்பிட்ட வகையிலான கிரிப்டோ கிராபியை பயன்படுத்துவதன் மூலம் பரிவர்த்தனைகள் பாதுகாக்கப்படுகின்றன. சில நாடுகள் கிரிப்டோ கரன்சிகளை அங்கீகரித்துள்ளன. இந்தியா இதுவரை கிரிப்டோ கரன்சிகளை அங்கீகரிக்கவில்லை.
ஐஐடி படிப்பை பாதியில் விட்டு சென்ற ராகுல்: ராகுல் என்ற இளைஞர், மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி அறிவியல் பிரிவில் இளநிலை படிப்புக்காக சேர்ந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அவருக்கு பொருளாதாரத்தில் ஆர்வம் இருப்பதை உணர்ந்தார்.
எனவே ஐஐடி படிப்படை பாதியிலேயே விட்டு விட்டு அமெரிக்காவின் தி வார்டன் பள்ளியில் பொருளாதாரத்தில் கல்வி பயில சென்றார். 2015 முதல் 2019 வரை தி வார்டன் பள்ளியில் பொருளாதாரம் பயின்ற ராகுல், பின்னர் மோர்கன் ஸ்டான்லியில் ஒரு ஆய்வாளராக தனது பணியை தொடங்கினார்.
2021இல் தொடங்கப்பட்ட காமா பாயிண்ட் கேப்பிடல்: கடந்த 2020 ஆம் ஆண்டில் ராய் தனது வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பினார். இங்கு நண்பர்கள் ஈஷ் அகர்வால் மற்றும் சனத்ரா ஆகியோருடன் இணைந்து காமா பாயிண்ட் கேப்பிடல் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் இது முகமை ஆகும்.
தொடங்கிய 5 மாதங்களில் 255 கோடிக்கு விற்பனை: சில மாதங்களுக்குள் காமா பாயிண்ட் கேப்பிடல் முதலீட்டாளர்களுக்கு நம்பகமான தேர்வாக மாறியது. அப்போது தான் தி பிளாக் டவர் கேபிடல் நிறுவனம் , காமா பாயிண்ட் கேப்பிடல் நிறுவனத்தை வாங்க முன் வந்தது.
நிறுவனம் தொடங்கிய 5 மாதங்களிலேயே சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 255 கோடி ரூபாய்க்கு விலை போனதால் ராகுல் ராய் மற்றும் நண்பர்கள் அதனை விற்பனை செய்து லாபமடைந்தனர்.
தற்போது ராகுல் ராய் பிளாக் டவர் கேப்பிடல் நிறுவனத்தில் சந்தை நடுநிலைத்துறையின் இணைத்தலைவராக ராய் பணியாற்றி வருகிறார். பிளாக் டவர் காமா பாயிண்ட் சந்தை நடுநிலை நிதியை அவர் இயக்கி வருகிறார்.
இது கிரிப்டோ கரன்சி மற்றும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய ரிஸ்க் குறைவான வழியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாக தெரிகிறது. கிரிப்டோ உலகின் ஒரு சக்தி வாய்ந்த நிறுவனமாக தி பிளாக் டவர் கேபிடலை உருவாக்குவதே தனது இலக்கு என ராகுல் ராய் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ கரன்சிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் நிச்சயம் நல்ல வளர்ச்சி அடையும் துறையாக இருக்கும் என நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.