ஐக்கிய அமீரகத்தின் Golden Visa… முண்டியடிக்கும் ஐரோப்பிய தொழிலதிபர்கள்
துபாய் மாகாணத்தில் சொத்துக்களை வாங்கும் ஐரோப்பிய தொழிலதிபர்களால் ஐக்கிய அரபு அமீரகத்தின் Golden Visa திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆண்டுகளுக்கான வதிவிட உரிமம்
ஐக்கிய அரபு அமீரகம் அனுமதிக்கும் 10 ஆண்டுகளுக்கான வதிவிட உரிமத்திற்காகவே பல ஐரோப்பிய முதலீட்டாளர்களும் துபாய் மாகாணத்தில் சொத்துக்களை வாங்குவதாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் பலர் ஐக்கிய அமீரகம் வழங்கும் வரியில்லா வருமானம், பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் இல்லாத சூழல் ஆகியவற்றிலிருந்து பயனடையவே விரும்புகின்றனர்.
அத்துடன் முதலீடு செய்வதிலிருந்து அதிக வருமானத்தையும் எதிர்பார்க்கின்றனர். Golden Visa திட்டத்தால் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துவர முடியும், மட்டுமின்றி தொழில் விசா ஏதுமின்றி, ஊழியர்களையும் உதவிக்கு அமர்த்தலாம்.
மட்டுமின்றி, சுற்றுலா விசா போன்றல்லாமல், அதிக நாட்கள் ஐக்கிய அமீரகத்தில் தங்கலாம். மேலும் உள்ளூர் மக்கள் போன்று Golden Visa வைத்திருப்போர் வங்கிக்கணக்கும் தொடங்கலாம்.
ஐக்கிய அமீரகம் அறிமுகம் செய்துள்ள Golden Visa திட்டமானது உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், திறன்படைத்த மாணவர்கள் ஆகியோருக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்கள்
2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வழங்கப்பட்ட கோல்டன் விசாக்களின் எண்ணிக்கை என்பது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்கள் ஐக்கிய அமீரகத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். பொதுவாக visit visa திட்டத்தில், ஒருவர் 6 மாதத்திற்கு ஒருமுறை நாட்டைவிட்டு வெளியேறி, உரிய விசா பெற்று பின்னர் திரும்ப வேண்டும்.
ஆனால் Golden Visa திட்டமானது காலவரம்பின்றி தங்கவும் அனுமதிக்கிறது. பிரான்ஸ் புதிய வரி திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையிலான பிரான்ஸ் மக்கள் ஐக்கிய அமீரகத்தில் குடியேற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல ஐரோப்பிய நாடுகளில் இதே சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களே துபாயின் குடியிருப்பு சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.