“அடுத்த 100 நாட்கள்..” பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி கொடுத்த டாஸ்க் என்ன?
டெல்லி பாரத மண்படத்தில் பாஜகவின் தேசிய குழுக் கூட்டம் 2 ஆவது நாளாக இன்று நடைபெற்றது. இதில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகளை கண்டித்து பாஜக சார்பில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், திமுக, காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் அயோத்தி ராமர் கோயில் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாகவும் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
சனாதனத்தை டெங்கு உள்ளிட்ட நோயுடன் திமுக ஒப்பிட்டு பேசிய போது, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு கண்டனம் தெரிவித்த பாஜக, இந்தியர்களின் அடிப்படை நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் திமுக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும் தீர்மானம் வாயிலாக குற்றம்சாட்டியுள்ளது.
அடுத்த நூறு நாட்களுக்கு புதிய நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும் என பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பாஜக தேசிய குழு கூட்டத்தில் பேசிய போது, ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பாஜக நாட்டிற்கு சேவை செய்துவருவதாக பெருமிதம் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே பாஜகவின் கனவு என குறிப்பிட்ட மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் அதற்கான மாபெரும் முயற்சியை எடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் பரப்புரையின்போது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடைவதுடன், அவர்களது நம்பிக்கையை பெற வேண்டும் என்றும் கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.