இன்று தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிஉரையுடன் தொடங்கியது. ஆளுநர்தமிழக அரசு தயாரித்து அளித்த உரையின் முதல் பத்தியை மட்டும்படித்த நிலையில், கூடுதலாக இணைத்து படித்தவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. தமிழக அரசு தயாரித்து அளித்த தமிழ், ஆங்கில உரைகள் மட்டும்அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இதைத்தொடர்ந்து, அன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்.15-ம் தேதிவரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பிப்.13-ம் தேதிஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14–ம் தேதியும் விவாதம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பிப்.15–ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய அளவில் பாஜகவிற்கு ஆதரவான அலை நீடிப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறினாலும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவான களம் அமைந்திருக்கிறது.இதை வலுப்படுத்தி அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் இன்று (பிப்.19) காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2024–25-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, பிப்.20–ம் தேதிவேளாண் நிதிநிலை அறிக்கையைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
மேலும் வரும் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட், வேளாண்பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து, பிப்.20–ம் தேதி முதலே 2 பட்ஜெட்கள் மீதான விவாதமும் தொடங்குகிறது. பிப்.21-ம் தேதி காலை மற்றும் மாலை என 2 வேளைகளும் பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன்பின், பிப்.22–ம்தேதி விவாதத்துக்கு இரு அமைச்சர்களும் பதிலளிக்கின்றனர். தொடர்ந்து, நிதி ஒதுக்கத்துக்கானசட்ட முன்வடிவு தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப்படுகிறது.
நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, அரசு வேலைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
மக்கள் எதிர்பார்ப்புகள்
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை திட்டம் புதிய பயனாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.
தீப்பெட்டி மூலப் பொருட்கள் விற்பனை விலையை கட்டுப்படுத்த வேண்டும்.