மத்திய அரசிற்கு அடுத்த செக்.! விவசாயிகள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு..!
வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துதல், குறைந்தபட்ச ஓய்வுதியம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த மூத்தத் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே டெல்லி செல்லும் தங்களின் பேரணியை தொடர்வதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் பஞ்சாப் -ஹரியாணா எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. முன்னதாக, சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (பிப்.15) நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், தங்களது போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று ஞாயிற்றுக்கிழமை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.
நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் விவசாயிகள் அமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடனான 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையில்,விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க அவசர சட்டத்தை உடண்டே இயற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.