சென்னையில் 24-ம் தேதி ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை..!
அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமது வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு, கட்சிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்து, தமிழ் நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து, இயக்கத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் சிந்தித்து, தமிழக மக்களுக்காக இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன என்று வீரமுழக்கமிட்டு அரும்பணியாற்றியவர்.
இத்தகைய போற்றுதலுக்குரிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளான 24.2.2024 – சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, அவரது உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, பிறந்த நாள் விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தும், தத்தமது பகுதிகளில் ஆங்காங்கே அவரது உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் கண் தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 24-ம் தேதியன்று ஜெயலலிதாவின் உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.