பட்ஜெட் விலையில் பெட்ரோல் சிஎன்ஜி (CNG) கார் வாங்க வேண்டுமா? இதோ உங்களுக்கான 5 கார்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பயணிகள் வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் எரிபொருள் விலையேற்றம். அதனால்தான் பெட்ரோல் கார்களுக்குப் பதிலாக சிஎன்ஜி (CNG) அல்லது எலெக்ட்ரிக் வாகனங்களை தேடி மக்கள் செல்கிறார்கள்.
சமீப வருடங்களில் பெட்ரோல்- சிஎன்ஜி (CNG) கார்களின் தேவைகளும் விற்பனையும் அதிகரித்துள்ளதை கண் கூடாக பார்க்க முடிகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்களும் CNG கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதிக பராமரிப்பு செலவு இல்லாத CNG கார்களை வாங்க விரும்புகிறவர்களுக்கு, இந்த 5 கார்கள் சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (Swift) :பல வருடங்களாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள மாருதி ஸ்விஃப்ட், தற்போது பெட்ரோல்- சிஎன்ஜி (CNG) ஆப்ஷனிலும் கிடைக்கிறது. VXi மற்றும் ZXi என இரண்டு மாடல்களில் வரும் ஸ்விஃப்ட் சிஎன்ஜி, மற்ற பெட்ரோல் கார்களை விட நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு சிறந்த மதிப்பை தரக்கூடியதாக இருக்கிறது.
மாருதி சுசுகி ஆல்டோ கே10 (Alto k10) : உங்களிடம் பணம் குறைவாகவே இருக்கிறது. ஆனால் கார் வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காகவே இருக்கிறது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் இயங்கும் மாருதி சுசுகியின் ஆல்டோ கே10. சிறிய ஹேட்ச்பேக் காரான இது, குடும்பத்தோடு பயணம் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும். இந்தக் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்சினோடு சேர்த்து CNG கிட்டும் உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் நகரத்திற்குள் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த கார் பயனுள்ளதாக இருக்கும்.
டாடா அல்ட்ரோஸ் (Altroz) : இதுவும் ஹேட்ச்பேக் மாடல்தான். ஆனால் டாடா நிறுவனத்தைச் சேர்ந்த கார். மாருதியின் பலேனோ, ஹூண்டாயின் i20 மற்றும் டொயோட்டா கிளான்ஸா போன்ற கார்களுக்கு சிறந்த போட்டியாளராக இருக்கும் டாடா அல்ட்ரோஸ், அதிக பாதுகாப்பு ரேட்டிங்கையும், வலுவான உடலமைப்பையும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி பல நவீன வசதிகளையும் கொண்டிருப்பதால் நிச்சயம் இந்தக் கார் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Exter) : 2023-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் எக்ஸ்டர், இந்தப் பிரிவிலேயே அதிக வசதிகளைக் கொண்ட காராகும். SUV காரான எக்ஸ்டர், பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி (CNG) என இரண்டு ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்தக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சினோடு சேர்த்து CNG கிட்டும் உள்ளதால் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு சிறந்த மதிப்பை தரக்கூடியதாக நிச்சியம் இருக்கும்.
மாருதி சுசுகி டிஸைர் (Dzire) : இந்தப் பட்டியலில் நாம் கடைசியாக பார்க்கப் போவது மாருதி சுசுகியின் டிஸைர். ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோருக்கு சிறந்த போட்டியாளராக இருக்கும் டிஸைர், பெட்ரோல்-சிஎன்ஜி (CNG) பவர்ட்ரைய்ன் ஆப்ஷனில் கிடைக்கிறது. மாருதியின் பிராண்ட் மதிப்பு மற்றும் நாடு முழுவதும் உள்ள சர்வீஸ் மையங்கள் காரணமாக மற்ற கார்களை விட ஒரு படி மேலானதாக இருக்கிறது டிஸைர்.