ரூ.12 லட்சம்…. ட்ரையம்ப் Scrambler 1200X பைக் இந்தியாவில் அறிமுகம் – இந்த பைக்கில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
ப்ரீமியம் ரக மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ட்ரையம்ப் (Triumph) நிறுவனம், பல வசதிகளுடன் கூடிய ஸ்க்ராம்ப்ளர் (Scrambler)1200X பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று நிறங்களில் கிடைக்கும் இந்தப் பைக்கின் ஆரம்ப விலை ரூ.11.83 லட்சமாகும். இந்த பைக் Scrambler 1200 XC பைக்கை விட விலை குறைவானதாகும். அதே சமயம் ஸ்க்ராம்ப்ளர் 1200 XE பைக்கை விட ஸ்க்ராம்ப்ளர் 1200X பைக்கின் விலை அதிகமாகும். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ்டெர் S (Sportster) மற்றும் நைட்ஸ்டெர் (Nightster) பைக்குகள் ஸ்க்ராம்ப்ளர் 1200X பைக்கிற்கு போட்டியாளராக இருக்கிறது.
Scrambler 1200X பைக் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:
சிங்கிள் சீட் அமைப்பில் வந்துள்ள ஸ்க்ராம்ப்ளர் 1200X பைக்கின் சீட் உயரம் 820mm உள்ளது. இதை உங்கள் வசதிக்கேற்றார்ப் போல் 795mm-ஆகவும் குறைத்துக்கொள்ள முடியும். இதனால் உயரம் குறைவானவர்களுக்கு நல்ல சௌகர்யம் கிடைப்பதோடு பைக் ஓட்டுவதற்கும் சிரமமின்றி உள்ளது. மிகவும் அடிப்படையான பேசிக் சஸ்பென்சன் மற்றும் பிரேக் சிஸ்டத்தையே ட்ரையம்ப் நிறுவனம் ஸ்க்ராம்ப்ளர் 1200X பைக்கில் பொறுத்தியுள்ளது. பைக்கின் பின்புறம் இருக்கும் Marzocchi மோனோ ஷாக்கை உங்களின் வசதிகேற்றார்ப் போல் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். பைக்கின் முன்பக்கத்தில் பொன்னிற வண்ணத்தில் USD ஃபோர்க் உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல், வளைவுகளில் வழுக்காமல் இருக்க டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி, பல வகையான ரைடிங் மோடுகள் என இந்தப் பைக்கில் உள்ள வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
பைக்கின் வீல் அளவுகள்:
ஸ்க்ராம்ப்ளர் 1200X பைக்கின் வீல்களைப் பொறுத்தவரை 21-17 இன்ச் என்ற காம்பினேஷனில் வருகிறது. ஆனால் ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பைக்கில் ஸ்போக் வீல் மட்டுமே; அலாய் வீல் கிடையாது. ஆகையால் நீங்கள் எந்தவித பயமும் இன்றி எல்லாவித சாலைகளிலும் பைக்கை ஓட்டிச் செல்லலாம். பைக்கின் ஒட்டுமொத்த எடை 228 கிலோவாகும். மேலும் இந்தப் பைக்கில் 15 லிட்டர் வரை எரிபொருள் நிரப்பலாம். ஆகையால் நீண்ட தூர பயனம் செய்பவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.
இஞ்சின் மற்றும் பவர்:
Scrambler 1200 சீரிஸ் பைக்கின் தனித்துவம் அதன் இஞ்சினில் தான் உள்ளது. 1200 சிசி, பேரலெல் ட்வின், லிக்கியூட் கூல்ட் இஞ்சின் இந்தப் பைக்கில் உள்ளது. இந்த இஞ்சின் அதிகப்பட்சமாக 88.7bhp பவரையும் 110Nm இழுவிசையும் கொண்டுள்ளது. இன்னும் இந்தப் பைக்கில் உள்ள சிறப்பம்சங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், LCD மற்றும் TFT டிஜிட்டல் கன்சோல் வசதியைக் கூறலாம்.