இனி அந்த வார்த்தையே சொல்லக் கூடாது.. இங்கிலாந்து அணியை கிழித்து தொங்கவிட்ட ரோஹித் சர்மா

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணி. இந்த நிலையில் போட்டி முடிந்த உடன் செய்தியாளர் சந்திப்பில் இங்கிலாந்து அணியின் பேஸ்பால் (Bazball) உத்தியை விமர்சிக்கும் வகையில் பேசி இருக்கிறார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.

இங்கிலாந்து அணி கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் பேஸ்பால் எனும் அதிரடி பாணி கிரிக்கெட்டை ஆடி வருகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என எதிலும் தடுப்பாட்டம் என்பதே இருக்கக் கூடாது என்பதே அதன் சாராம்சம். ஒரு பேட்ஸ்மேன் எப்போதும் ரன் குவிப்பதை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். மாறாக தடுப்பாட்டம் ஆடி போட்டியை டிரா செய்யலாம் என்றோ, எதிரணி பந்துவீச்சாளர்களை தடுப்பாட்டம் ஆடி சோர்வடைய செய்யலாம் என்றோ யோசிக்கக் கூடாது.

அதே போல ஒரு பந்துவீச்சாளர் எப்போதும் விக்கெட் வீழ்த்துவதை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். அதற்கான பந்துவீச்சு திட்டத்தை மட்டுமே செயல்படுத்த வேண்டும். மாறாக குறைவாக ரன் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பந்து வீசக் கூடாது. இதுவே பேஸ்பால் எனும் உத்தியாக பார்க்கப்படுகிறது.

இந்த உத்தியை பயன்படுத்தி இங்கிலாந்து அணி கடந்த காலங்களில் பல போட்டிகளில் 3 நாட்களுக்குள் டெஸ்ட் போட்டிகளை வென்று இருக்கிறது. ஆனால், இந்த திட்டம் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக வேலை செய்யவில்லை என்பதே உண்மை. இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் டெஸ்ட் போட்டிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு ஆடுகிறார்கள்.

இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வென்றாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 557 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது இந்தியா. நான்காம் நாளில் 40 ஓவர்களும், ஐந்தாம் நாள் ஆட்டமும் மீதமிருந்த நிலையில் இங்கிலாந்து அணி போட்டியை டிரா செய்ய முயற்சி செய்து இருக்கலாம். அல்லது நிதானமாக ரன் சேர்க்க முயற்சி செய்து இருக்கலாம். ஆனால், 39.4 ஓவர்களில் வெறும் 122 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் – அவுட் ஆனது.

இதை அடுத்து போட்டி முடிந்த உடன் பேசிய ரோஹித் சர்மா, “ஒரு டெஸ்ட் போட்டி ஆடும் போது அதை 3 – 4 நாட்களில் ஆடக் கூடாது. அந்தப் போட்டியில் ஐந்து நாட்களும் நீங்கள் களத்தில் இருக்க வேண்டும்.” என பேஸ்பால் குறித்து விமர்சனம் செய்தார். இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பின் அவர் இப்படி பேசி இருப்பது அந்த அணியின் மீதான நேரடி தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *