குடிசையில்லா தமிழ்நாடு.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு.. அப்போ PMAY திட்டம்..?
2024-2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டுப் பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகச் சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர், இந்திய பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2-வது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அதன் உள்கட்டமைப்பு, மக்களின் வாழ்க்கை முறை கட்டாயம் மேம்படுத்தப்பட வேண்டும். அதிலும் முக்கியமாக அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும் தலையாயக் கடமையாகும்.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டத்தில் கடைக்கோடி மக்களுக்கும் நல்வாழ்வு என்ற முக்கியத் திட்டத்துடன் தமிழ்நாடு அரசு பட்ஜெட் அறிக்கையைத் திட்டமிட்டு உள்ளது. இதன் அடிப்படையில் 2030க்குள் தமிழ்நாட்டைக் குடிசையில்லா மாநிலமாக மாற்றப்பட வேண்டும் எனக் கலைஞரின் கனவு இல்லம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட உள்ளது, இதில் 1 லட்சம் வீடுகள் 2024-25 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு வீட்டுக்கு சுமார் 3.5 லட்சம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது, இந்தத் திட்டத்தின் பயனாளிகளே வீடுகளைக் கட்டிக்கொள்ளலாம் என்ற நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மத்திய அரசின் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் கிராமப்புற வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் அடுத்த 5 வருடத்தில் கூடுதலாக 2 கோடி மக்களுக்குச் சொந்து வீடு கனவை நினைவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்காக 2024-25 ஆம் நிதியாண்டுக்குப் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு 80,671 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 79,590 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் கடன் பெறுவோருக்குச் சதவீத வட்டியில் வீட்டுக்கடன் பெற முடியும். இந்தத் தீட்டத்தின் கீழ் அதிகப்படியாக 70000 ரூபாய் அளவிலான தொகையை குறைவான வட்டியில் கடன் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் 269.098 சதுரடி கொண்ட வீட்டைக்கட்டிக்கொள்ள முடியும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மானிய விலை வீட்டுக்கு அளிக்கப்படும் கடனில், சலுகையில் மத்திய மாநில அரசின் பங்கீடு 60:40 ஆக இருக்கும். PMAY கிராமின் திட்டத்தின் கீழ் அதிகப்படியாக 2 லட்சம் வரையில் மானிய வட்டி விகிதம் அளிக்கப்படும்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில், சொந்தமாக நிலம் இல்லாத பட்சத்தில் இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனத் தெரிகிறது. இதனால் வருமானம் அளவீட்டில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கும் பலன் அடைவார்கள்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பலன் பெற முடியும். ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் அடித்தட்டு மக்களுக்குப் பெரிய அளவில் பயனளிக்கும்.