கோயம்புத்தூர்-க்கு வந்த டக்கரான பட்ஜெட் அறிவிப்புகள்..!!
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் விவரங்களை பல முக்கிய அறிவிப்புகளுடன் தாக்கல் செய்தார். பெரும்பாலான அறிவிப்புகள் அறிவுசார் பொருளாதார வளர்ச்சி மற்றும் காத்கோடி மக்களுக்கான நலத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை.
இதேபோல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய உள்கட்டமைப்பு முதல் புதிய முதலீடுகளை ஈர்ப்பது வரையில் பல திட்டங்களைச் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாகப் பட்ஜெட் அறிவிப்பில் ஐடி, தொழிற்துறை-க்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகப்படியான திட்டங்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட அளவில் வெளியான முக்கியப் பட்ஜெட் அறிவிப்புகள் பிரித்து தொகுக்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் மாநிலத்தின் வேகமாக வளரும் மாவட்டம் அல்லாமல் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருமானம், வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாவட்டம். கோயம்புத்தூர்-க்குப் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகளை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இணைய வசதியை மேம்படுத்தும் நோக்கில் அரசு 5 மாவட்டத்தில் சுமார் 1,000 இடங்களில் இலவச வை-பை சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது, இதில் கோயம்புத்தூர்-ம் அடக்கம்.
கேயம்புத்தூர் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் மெட்ரோ ரயில் திட்டங்கள், மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் செயல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்துள்ளது. இதில் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டமும் உள்ளது.
தமிழ்நாட்டின் ஐடி நகரமாக மாறி வரும் கோயம்புத்தூரில் 20 லட்சம் சதுர அடியில் 1,100 கோடி ரூபாய் செலவில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் போது அறிவித்தார்.
மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
அறிவுசார் பொருளாதார வளர்ச்சி பிரிவின் கீழ் கோயம்புத்தூரில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் எனப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அமைக்கப்படும் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்களில் ஒன்று கோயம்புத்தூர் மாவட்டம் நீலகிரியிலும் அமைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழ்நாட்டில் பணிக்குச் செல்லும் பெண்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட தோழி விடுதிகள் திட்டம் பெரும் வெற்றி கண்ட நிலையில் சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் 3 தோழி விடுதிகள் திறக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.