தமிழ்நாடு பட்ஜெட் 2024: வருவாய் பற்றாக்குறை அளவீடு தொடர் உயர்வு..!
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை மதிப்பிடப்பட்டதை விட அதிகரித்துள்ளது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்து, பட்ஜெட் அறிக்கையின் முடிவில் நிதி நிலை குறித்த தகவல்களை சமர்ப்பித்தார்.
2023-24க்கான திருத்தப்பட்ட அளவான 44,907 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 2024-25ல், 49,279 கோடி ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
இது 2023-24 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 37,540 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகம், என்பது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் காட்டுகிறது. வருவாய் பற்றாக்குறை குறித்த தகவல்களைத் தமிழகச் சட்டசபையில் இன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க ஒரு குறிப்பிடத்தக்கக் காரணம், தமிழ்நாட்டின் மின்சாரப் பிரிவான TANGEDCO-வின் கூடுதல் செலவுகளைத் தமிழ்நாடு அரசு ஈடுசெய்து வருவது தான். இதன் காரணமாக வருவாய் அளவு அதிகரித்தாலும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2023-24 ஆம் ஆண்டில் TANGEDCO-க்கு தமிழ்நாடு அரசு சுமார் 17,117 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருந்தது, மேலும் 2024-25 ஆம் ஆண்டில் மேலும் ₹14,442 வழங்க பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
15 வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி , ஒரு மாநிலம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் வரை கடன் பெறலாம். இந்திய அரசு மார்ச் 2022 இல் வெளியிட்ட அறிவிப்பில் மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சிறப்பு நோக்க பிரிவுகளின் கடன்களையும் மாநிலத்தின் கடன்களாகக் கணக்கிடப்படும் என அறிவித்தது. அதற்கு முன்பு TANGEDCO போன்ற நிறுவனங்களின் கடன் தனியாகக் கணக்கிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அரசு உறுதியாக உள்ள நிலையில், மத்திய அரசின் கணக்கீடு முறை மாநிலத்தின் மீது பெரும் நிதிச்சுமையை உருவாக்கி, வளர்ச்சி முயற்சிகளுக்கு நிதியளிக்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது என்று தென்னரசு கூறினார்.
2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த தென்னரசு, கூட்டாட்சி தத்துவத்தை முற்றிலும் மறந்துவிட்டு, மாநிலங்களை மாற்றாந்தாய் போல் மத்திய அரசு நடத்துகிறது எனக் குற்றம்சாட்டினார். பல முறை, பல வகையில் கோரிக்கைகள் இருந்தும், மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்கு எந்த உதவியும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
2024-25 பட்ஜெட் மதிப்பீடுகளில் தமிழகத்தின் மொத்த பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவீதமாகும். 15வது நிதிக் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க, 2022-23ல் 3.46 சதவீதமாக இருந்ததை 2023-24ல் 3.45 சதவீதமாக 2024-25ல் 3.44 சதவீதமாகக் குறைத்துள்ளது.