கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் குறித்து மோசமான செய்திகளை பகிர்ந்த பிரித்தானிய பொலிசார்
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் குறித்து மோசமான செய்திகளை பகிர்ந்த பிரித்தானிய பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பாவிகள் மூவரைக் கத்தியால் குத்திய நபர்
கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 14ஆம் திகதி, அதிகாலையில், நாட்டிங்ஹாம் பல்கலை மாணவர்களான கிரேஸ் (Grace O’Malley-Kumar, 19) மற்றும் பர்னபி (Barnaby Webber, 19) என்னும் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Valdo Calocane (31) என்னும் நபர் பர்னபியைக் கத்தியால் குத்தினார். தன் நண்பனைக் காப்பாற்ற Valdoஉடன் போராடிய கிரேஸுக்கும் கத்திக்குத்து விழ, இருவரும் உயிரிழந்தார்கள்.
அதைத் தொடர்ந்து Ian Coates (65) என்பவரைக் கொலை செய்த Valdo, அவரது வேனை திருடிச் சென்று பாதசாரிகள் மீது மோதினார்.
இளம்பெண் குறித்து மோசமான செய்திகளை பகிர்ந்த பிரித்தானிய பொலிசார்
குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை போதாது என கொல்லப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் கூறியுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்ணான கிரேஸ் குறித்து ஆபாசமான செய்திகளை பகிர்ந்துள்ளார்கள் பிரித்தானிய பொலிசார் இருவர்.
பொலிசாரில் ஒருவர் கிரேஸ் உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து வாட்ஸ் ஆப்பில் செய்திகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். PC Matthew Gell என்னும் பொலிசார், கிரேஸ் குறித்து ஆபாசமான ஒரு செய்தியை தன் மனைவிக்கும் ஒரு நண்பருக்கும் அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள பர்னபியின் தாயாகிய எம்மா, இவ்வளவு அருவருப்பாகவா பொலிசார் விசாரணை நடத்துவார்கள், அந்த பொலிசார் எங்கள் பிள்ளைகளின் உடல் குறித்து தேவையில்லாமல் ஆபாசமாக செய்திகளை பரப்பியது மன்னிக்க இயலாத செயல் என்று கூறியுள்ளார்.
அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பொலிசாரில் ஒருவருக்கு அவர் கூடுதலாக பயிற்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், PC Gellக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ‘The Sun’ பத்திரிகை தெரிவித்துள்ளது.