செட்டிநாடு ஸ்டைல் வெந்தய குழம்பு வைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..
பொதுவாக உடலில் சூடு அதிகமானாலோ அல்லது வயிறு வலி ஏற்பட்டாலோ வெந்தையத்தை எடுத்து கொடுத்து வாயில் போடச்சொல்லி தண்ணீர் குடிக்கச் சொல்வது வழக்கம். மேலும் வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
வெந்தயத்தை கொண்டு வெந்தைய களி, வெந்தய குழம்பு, வெந்தய ரசம் என பலவிதமாக செய்து ஆரோக்கியமாக சாப்பிடுவவோம். ஆனால் வெந்தயத்தின் கசப்புத்தன்மை காரணமாக குழந்தைகள் அதை அதிகம் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.
பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வெந்தயத்தை கொண்டு எவ்வாறு செட்டிநாடு ஸ்டைலில் வெந்தய குழம்பு எவ்வாறு செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இந்த குழம்பை நீங்கள் சாதம், தோசை, இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்..
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் – 20 – 25
தக்காளி – 3
பூண்டு – 10 – 15 பல்
பச்சை மிளகாய் – 4
புளி – ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெல்லம் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி இலை – சிறுதளவு
கல் உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு தேவையானவை :
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
கருப்பு மிளகு – 1/2 ஸ்பூன்
பூண்டு – 4 பல்
வெந்தய சீராக பொடி செய்ய தேவையானவை :
வெந்தயம் – 5 டீஸ்பூன்
சீரகம் – 3 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் 5 ஸ்பூன் வெந்தயம் மற்றும் 3 ஸ்பூன் சீரகம் இரண்டையும் தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து கொள்ளுங்கள்.
பிறகு இரண்டையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய், 4 பூண்டு, அரை ஸ்பூன் மிளகு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து லைட்டாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
வெந்தயம் நன்றாக பொரிந்து உளுந்தம் பருப்பு சிவந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயம் சிறிதளவு வதங்கியவுடன் பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பிறகு அதனுடன் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
தற்போது நறுக்கி வைத்துள்ள தக்காளி, கறிவேப்பிலை மற்றும் கல் உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கி கொள்ளுங்கள்.
அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி வதக்கவும்.
மசாலாக்களின் பச்சை வாசம் போனவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கலந்து பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
புளியின் பச்சை வாசனை போய் குழம்பு நன்றாக கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதில் இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு சமைக்கவும்.
குழம்பு நன்றாக கொதித்தவுடன் ஏற்கனவே நாம் அரைத்து வைத்துள்ள வெந்தய சீராக பொடியை தேவையான அளவு சேர்த்து கலந்துவிட்டு குறைந்த தீயில் சமைக்கவும்.
எண்ணெய் பிரிந்துவரும் தருவாயில் சின்ன துண்டு வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு கொள்ளுங்கள்.
குழம்பை இறக்கி வைப்பதற்கு முன் சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் சுவையான ‘செட்டிநாடு வெந்தய குழம்பு’ தயார்..