மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மிட்சுபிஷி! டிவிஸ் நிறுவனத்துடன் கூட்டணி!

புகழ்பெற்ற ஜப்பானிய கார் நிறுவனமான மிட்சுபிஷி இந்த ஆண்டு கோடை காலத்தில் மீண்டும் இந்தியாவில் கார் விற்பனையில் இறங்க உள்ளது. இதற்காக டி.வி.எஸ். (TVS) மொபிலிட்டி நிறுவனத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வாங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிட்சுபிஷியின் முதலீடு 33 மில்லியன் டாலர் முதல் 66 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒழுங்குமுறை அனுமதிகளுக்காக காத்திருக்கிறது. முதலீட்டு ஒப்பந்தம் முடிந்தவுடன், மிட்சுபிஷி இந்தியா முழுவதும் அதன் டீலர்ஷிப் நெட்வொர்க்கை நிறுவ டிவிஎஸ் மொபிலிட்டியுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.

டிவிஎஸ் மொபிலிட்டி ஏற்கனவே இந்தியாவில் ஹோண்டா கார்களின் டீலர்ஷிப்களை நிர்வகித்து வருவதால், நாடு முழுவதும் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. புதிய கார் விற்பனையில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களில் சுஸுகி மோட்டார் மட்டுமே அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

மிட்சுபிஷி இந்தியாவில் உள்ளூர் பிராண்டுகளுடன் விற்பனை தங்கள் தயாரிப்புகளையும் செய்யும் நோக்கத்துடன் வரவுள்ளது. இந்த வருகை சுஸுகி நிறுவனத்துக்கு போட்டியை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

டிவிஎஸ் மற்றும் மிட்சுபிஷி இடையேயான டீலர்ஷிப் ஒப்பந்தம் மூலம் மின்சார கார்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மிட்சுபிஷி ஒரு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு மற்றும் சேவை தொடர்பான சந்திப்புகளை ஆன்லைனில் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு காலத்தில் இந்தியாவில் கார் பிரியர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கிய மிட்சுபிஷி, கார் உற்பத்தியில் பெருகிய போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் 2016 இல் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனையை நிறுத்தியது. அதற்கு முன் லான்சர் மற்றும் பஜேரோ போன்ற பிரபலமான மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்துவந்தது நினைவூட்டத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *