குட் நியூஸ்..! கேரள பள்ளிகளில் இன்று முதல் வாட்டர் பெல் முறை அமல்..!
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெப்ப நிலை இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கண்ணூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை தாண்டியது. அங்கு தொடர்ந்து சில நாட்களாக 37.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.
கோழிக்கோட்டில் வரும் நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி வரையிலும், திருவனந்தபுரத்தில் 36 டிகிரி வரையிலும் வெயில் அடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வுத்துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே போன்று ஆலப்புழா மாவட்டத்திலும் இயல்பை விட அதிகமாக வெயில் அடிக்கும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கண்ணூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மக்கள் வெயில்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வாட்டர் பெல் என்ற முறை அமல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய முறை கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று (20-ம் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய முறையின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தினமும் காலை 10.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி ஆகிய 2 முறை குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக மணி அடிக்கப்படும்.
குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும். அந்த நேரத்தில் குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
வாட்டர் பெல் முறையின் மூலம் வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு நீரிழப்பு மற்றும் பிற உடல்நல பிரச்சினைகள் வருவதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.