திருப்பதியை போல் அயோத்தி ராமர் கோயிலும், அயோத்தியை போல் திருப்பதி கோயிலும் மாறப்போகிறதா?
கோவில்களை நிர்வகிக்கும் விஷயத்தில் திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் இருந்து பாடம் படிக்க தேவையான ஏற்பாடுகளில் அயோத்தி குழந்தை ராமர் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக குழந்தை ராமர் கோவில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் குழுவினர் ஆகியோர் அயோத்தி சென்று பக்தர்களின் வசதிக்காக அங்கு செய்து கொடுக்க வேண்டிய பணிகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
தங்கள் ஆய்வு தொடர்பான அறிக்கையை ஓரிரு நாட்களில் அயோத்தி குழந்தை ராமர் கோவில் நிர்வாகத்திடம் அவர்கள் ஒப்படைக்க உள்ளனர். அதேபோல் குழந்தை ராமருக்கு பக்தர்களிடம் இருந்து கிடைக்கும் காணிக்கை, நன்கொடை ஆகியவற்றை பயன்படுத்தி பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் அடிப்படை தேவைகள், ஹிந்து தர்ம பிரகாரத்தை விரிவாக்கம் செய்வது ஆகியவை பற்றிய அறிக்கைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அயோத்தி கோவில் நிர்வாகத்திடம் அளிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அயோத்தியில் இருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பகுதிகளில் மது, மாமிசம் ஆகியவற்றை விற்பனை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை போன்ற ஒன்றை திருப்பதியிலும் அமல்படுத்த ஆலோசனைகள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சமீபத்தில் திருப்பதி மலையில் நடைபெற்ற மடாதிபதிகள் மாநாட்டில் வழங்கப்பட்டது. இந்த ஆலோசனை தேவஸ்தான நிர்வாகத்தில் கடந்த 15 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
அதன்படி, ஆந்திர மாநில அரசின் ஒப்புதலுடன் திருப்பதி மலையில் நடைமுறையில் இருப்பது போன்ற மது, இறைச்சி, புகையிலை பொருட்கள் ஆகியவற்றிற்கான தடையை திருப்பதி, திருச்சானூர் ஆகிய ஊர்களிலும் கொண்டுவர திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போட்டு வைத்திருக்கும் மது, இறைச்சி, புகையிலை பொருட்கள் பயன்பாடு ஆகியவற்றிற்கான தடை ஆலோசனையை கீழ் திருப்பதி என்று கூறப்படும் திருப்பதி, திருச்சானூர் என்று கூறப்படும் அலமேலு மங்காபுரம் ஆகிய ஊர்களிலும் நேரம், காலம் பார்த்து சரியான சமயத்தில் அமலுக்கு கொண்டுவர திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள், மத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை கையாளும் பொதுமக்கள் திருப்பதி, திருச்சானூர் ஆகிய ஊர்களில் வசிப்பதால் மது, இறைச்சி, புகையிலை பொருட்கள் பயன்பாடு ஆகியவற்றிற்கு தடை விதிப்பது சாத்தியமில்லை என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.
ஆனால் இதே போன்ற தடையை பல்வேறு வகையான மத நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை கையாளும் அயோத்தி சுற்றுவட்டார பகுதிகளில் அந்த மாநில அரசு வெற்றிகரமாக அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
எனவே இது போன்ற விஷயங்களில் முன்னணியில் இருக்கும் நாம் அரசின் அனுமதி பெற்று ஏன் இங்கும் அந்த தடையை பிறப்பிக்க கூடாது என்ற கேள்வி தேவஸ்தான நிர்வாக வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது. கோவில்களை நிர்வகிப்பது, பக்தர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்து கொடுப்பது, பக்தர்கள் மூலம் கிடைக்கும் காணிக்கை வருமானம், டிக்கெட் கட்டண வருமானம், அறை வாடகை மூலம் கிடைக்கும் வருமானம், நன்கொடைகளை திரட்டுவது, அவற்றை முறையான வகையில் செலவு செய்வது ஆகிய விஷயங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நாட்டிலேயே முதல் நிலையில் உள்ளது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டரை கோடி பக்தர்கள் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டு தேவஸ்தானத்திற்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்தை கொட்டி கொடுத்து செல்கின்றனர்.
ஏழுமலையான் கோவில் தவிர நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட கோவில்களையும் தேவஸ்தான நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இது தவிர தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பின் தங்கிய பகுதிகள், மீனவர் குடியிருப்புகள் ஆகிய இடங்களில் சிறிய அளவிலான ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டும் பணியிலும் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
தேவஸ்தானத்தின் இந்த பணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு தினமும் ஆயிரம் பக்தர்கள் தலா பத்தாயிரம் ரூபாயை குறைந்த பட்சம் நன்கொடையாக வழங்குகின்றனர். ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி தரிசனம் அனுமதி தினமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தேவஸ்தானத்தின் கோவில்களை கட்டும் திட்டத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் ஒரு கோடி தினமும் நன்கொடையாக கிடைக்கிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இது போன்ற செயல்களை தெரிந்து கொண்ட அயோத்தி கோவில் நிர்வாகம், இந்த விஷயத்தில் தேவையான பாடத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடமிருந்து ஏன் படிக்கக்கூடாது என்று கருதுவதில் வியப்பு ஏதும் இல்லை. அதேபோல் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, இந்து தர்ம பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது ஆகியவற்றிலும் திருப்பதி நிர்வாகத்தை பின்பற்றமும் அயோத்தி கோவில் நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது இப்படி இருக்க மீள் கட்டுமானம் செய்யப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட அயோத்தி குழந்தை ராமர் கோவிலுக்கு திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை விட மிகவும் அதிக அளவில் பக்தர்கள் வந்து குவிக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சராசரியாக சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் குழந்தை ராமர் கோவிலுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கிடைக்கும் நன்கொடை, காணிக்கை ஆகியவற்றை விட அதிக அளவில் காணிக்கை, நன்கொடை ஆகியவை குழந்தை ராமருக்கு கிடைக்க துவங்கி உள்ளது.
எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, வருமானமாக கிடைக்கும் பணத்தை சரியான வகையில் செலவழிப்பது ஆகியவை போன்ற விஷயங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து கற்று கொள்ள அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் முடிவு செய்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டிக்கு அயோத்திக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
அந்த அழைப்பை ஏற்று அயோத்தி சென்றுள்ள தேவஸ்தான அதிகாரிகள் குழுவுடன் அயோத்தி குழந்தை ராமர் கோவிலில் சில பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பக்தர்களிடம் இருந்து கிடைக்கும் நன்கொடையாகவும் காணிக்கையாகவும் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி பக்தர்களுக்கு அதிக அளவில் வசதிகளை அயோதியில் செய்து கொடுப்பது பற்றிய ஆலோசனைகளையும் அவர் அயோத்தி கோவில் நிர்வாகத்திற்கு வழங்க இருக்கிறார்.
அதேபோல் அயோத்தி கோவிலை சுற்றி உள்ள 15 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் இருக்கும் ஊர்களில் மது, இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை போல் திருப்பதி மலையின் நுழைவு வாயிலாக இருக்கும் கீழ் திருப்பதி, பத்மாவதி தாயார் குடிகொண்டிருக்கும் அலமேலு மங்காபுரம் ஆகிய ஊர்களில் மது, இறைச்சி ஆகியவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
சமீபத்தில் திருப்பதி மலையில் நடைபெற்ற சனாதன சதஸ் என்று கூறப்படும் மடாதிபதியில் மாநாட்டிலும் பீடாதிபதிகள், மடாதிபதிகள் ஆகியோர் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசியுள்ளனர்.
எனவே எந்த விதமான சட்ட நடைமுறைகளை பின்பற்றி அயோத்தி சுற்றுவட்டார பகுதிகளில் மது, இறைச்சி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது பற்றி தர்மா ரெட்டி தெரிந்து அறிந்து வர இருப்பதாக தெரியவந்துள்ளது. மது, இறைச்சி தடை நிபந்தனையை நடைபெற இருக்கும் பொது தேர்தலுக்குப் பின் திருப்பதி, திருச்சானூர் ஆகிய ஊர்களில் சரியான நேரம் பார்த்து அமலுக்கு கொண்டு வருவது பற்றி தேவஸ்தான வட்டாரத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்ற வருகின்றன.
ஆந்திர அரசின் ஒப்புதலை பெற்று இந்த நிபந்தனையை திருப்பதி, அலமேலு மங்காபுரம் ஆகிய ஊர்களில் அமல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஆந்திர அரசியல் கட்சிகள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான விஷயங்களில் ஆந்திர அரசியல் கட்சிகள் எப்போதும் தேவஸ்தான நிர்வாகத்தின் முடிவுகளுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த விஷயத்திலும் ஆந்திர அரசியல் கட்சிகள் தேவஸ்தானத்திற்கு முழு அளவில் ஒப்புதலை கொடுக்கும் என்ற நம்பிக்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கும் உள்ளது.