சட்ட விரோத காவல்: டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய நீலம் ஆசாத்!
டிசம்பர் 13 நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத், “தன்னை போலீஸ் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது” என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தை புதன்கிழமை (டிச.27) அணுகினார்.
அப்போது, தாம் சுதந்திரமாக நடக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தாம் விருப்பப்படும் வழக்கறிஞரை வைத்து வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
நீலம் ஆசாத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால பெஞ்ச் முன் அவசர விசாரணைக்காக குறிப்பிடப்படும்.
இந்தியச் சட்டங்களின்படி, ஒரு கைதி அல்லது அவர்கள் சார்பாக ஒரு நபர், தாங்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தால், உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சதியில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று நகர காவல்துறை கூறியதை அடுத்து, டிசம்பர் 21ஆம் தேதியன்று நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசாத் உட்பட நான்கு குற்றவாளிகளின் போலீஸ் காவலை விசாரணை நீதிமன்றம் ஜனவரி 5 வரை நீட்டித்தது.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ண குப்பியில் இருந்து புகையை வெளியேற்றினர் என்பது நினைவு கூரத்தக்கது.